3 மணிநேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பிய அல்லு அர்ஜுன்!
நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஹைதராபாத் போலீஸார் நடத்திய மூன்று மணிநேர விசாரணை நிறைவடைந்தது.
புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரத்தில் ஹைதராபாத் காவல் துறை அனுப்பிய சம்மனை ஏற்று, அல்லு அர்ஜுன் தனது வழக்கறிஞருடன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் ஹைதராபாத் மத்திய மண்டல காவல் ஆணையர் அக்ஷன்ஷ் யாதவ் 3 மணிநேரமாக விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தனது தந்தை அல்லு அரவிந்துடன் பகல் 2 மணியளவில் விசாரணை நிறைவடைந்து காவல் நிலையத்தில் இருந்து அல்லு அர்ஜுன் வீடு திரும்பியுள்ளார்.
இதையும் படிக்க : கொலை முயற்சி, கொள்ளை வழக்குகளில் 21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளி கைது!
புஷ்பா 2 சிறப்பு திரையிடலுக்கு முன்அனுமதி பெறாமல் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் திரையிட்ட நிலையில், காவல்துறையிடம் தகவல் தெரிவிக்காமல் நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வருகைதந்தார்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு பெண் பலியான விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அல்லு அர்ஜுனின் பெயர் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அல்லு அர்ஜுனை காவல் துறையினர் கைது செய்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்றைய தினமே உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், முறையான ஆவணங்கள் இல்லை என்ற காரணம் காட்டி, அல்லு அர்ஜுனை ஒரு நாள் இரவு முழுவதும் சிறையிலேயே காவல்துறையினர் வைத்திருந்தனர்.
அடுத்த நாள் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளார்.