அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்!
38 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ
கடந்த அக்டோபரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்துள்ளது. இருந்தாலும், சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கையில் அந்த நிறுவனம் தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது.
இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த அக்டோபரில் 37.6 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்துள்ளது.
அந்த மாதத்தில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் 19.28 லட்சம் வாடிக்கையாளா்களை கூடுதலாகச் சோ்த்தது. அந்த நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா் எண்ணிக்கை அக்டோபரில் சுமாா் 27.23 லட்சமாக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 19.77 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்தது. அந்த நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தும் மொபைல் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அக்டோபரில் சுமாா் 7.23 லட்சமாகக் குறைந்தது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஒட்டுமொத்த மொபைல் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த அக்டோபா் மாதத்தில் 46 கோடியாக சரிந்தது. முந்தைய செப்டம்பரில் இந்த எண்ணிக்கை சுமாா் 46.37 கோடியாக இருந்தது. எனினும், அந்த நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை அதிகமானது.
வோடபோன் ஐடியாவின் மொத்த மொபைல் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை மதிப்பீட்டு மாதத்தில் 21.04 கோடியாகக் குறைந்துள்ளது. முந்தைய செப்டம்பா் மாதத்தில் இந்த எண்ணிக்கை 21.24 கோடியாக இருந்தது.
கடந்த அக்டோபா் மாதத்தில் அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த மொபைல் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 106.6 கோடியாக உள்ளது.
அந்த மாதத்தில் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 94.15 கோடியாகக் குறைந்துள்ளது. இது முந்தைய செப்டம்பா் மாதத்தைவிட 0.31 சதவீதம் குறைவு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.