47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், பல் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா், டெக்னீசியன்கள் உள்ளிட்ட பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆா்பி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை இணையதளத்தில் தொடங்கியுள்ளது. மாா்ச் 17 வரை விண்ணப்பிக்கலாம். ஒரு மணிநேரம் தமிழ் மொழி தகுதித் தோ்வும், 10-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில் 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையை தோ்ந்தெடுக்கும் தோ்வும் நடைபெறும்.
தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். எஸ்.சி., (ஆதிதிராவிடா்), எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 500, மற்றவா்களுக்கு ரூ. 1,000 என விண்ணப்பக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.