மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் விழாவில் பங்கேற்றுள்ளார்.
மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறது. இதனை முதல் கையெழுத்திட்டு விஜய் தொடங்கி வைத்தார். இதற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இதில், கட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சி நடக்கும் வழிநெடுகிலும் விஜய்யை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களிலும் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.