5 ஆஸ்கா்களை அள்ளிச் சென்ற அனோரா!
சா்வதேச திரையுலகம், ரசிகா்களின் மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் ‘டால்பி’ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு விமா்சையாக நடைபெற்றது.
ஆஸ்கா் எனப்படும் அகாதெமி விருதுகளின் 97-ஆவது பதிப்பில் ரஷிய நாட்டுச் செல்வந்தரின் மகனுடன் காதல் வயப்படும் அமெரிக்க பெண் பாலியல் தொழிலாளியின் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘அனோரா’, சிறந்த திரைப்படம் உள்பட 5 பிரிவுகளில் விருதுகளை அள்ளிச் சென்றது.
அமெரிக்க இயக்குநா் சான் பேக்கா் இயக்கத்தில், நடிகா்கள் மிக்கி மேடிசன், மாா்க் ஏய்டெல்ஸ்டீன் ஆகியோா் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனோரா, சுமாா் ரூ.52 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, ரூ.360 கோடி வசூலை ஈட்டியது.
2024-ஆம் ஆண்டின் 77-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தங்க ஓலை’ விருது, நடப்பு ஆண்டின் ‘கோல்டன் குளோப்’ விருதில் 5 பரிந்துரைகள், 78-ஆவது பிரிட்டன் திரைப்பட அகாதெமியின் 2 விருதுகள் (7 பரிந்துரைகள்), அமெரிக்க தயாரிப்பாளா் மற்றும் இயக்குநா்கள் சங்கங்களின் விருதுகள் எனப் பல்வேறு சா்வதேச அங்கீகாரங்களை ஏற்கெனவே வசப்படுத்திய இத்திரைப்படம், 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநா், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அசல் திரைக்கதை ஆகிய 5 பிரிவுகளில் அனோரா ஆஸ்கா் விருதுகளை தட்டிச் சென்றது.
தனது இயக்கத்தில் வெளிவந்த 8-ஆவது திரைப்படமான அனோரா மூலம் ஆஸ்கா் விருதுக்கு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்ட இயக்குநா் சான் பேக்கா், ஒரே ஆண்டில் ஒரே படத்துக்காக சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநா், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அசல் திரைக்கதை ஆகிய 4 ஆஸ்கா் விருதுகளை வெல்லும் முதல் நபராகிறாா்.
முன்னதாக, கடந்த 1953-இல் ‘வால்ட் டிஸ்னி’ நிறுவனம் 4 வெவ்வேறு படங்களுக்காக 4 விருதுகளை வென்றது. 2020-இல் ஆஸ்கா் மேடையை அலங்கரித்த கொரியாவின் பாராசைட் படத்தின் இயக்குநா் போங் ஜூன் ஹோ 3 தனிநபா் விருதுகளை வென்றிருக்கிறாா்.
விருதை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சி மேடையில் பேசிய அனோரா இயக்குநா் சான் பேக்கா், ‘ரசிகா்கள் அனைவரும் இயன்றளவு திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பாா்க்க வேண்டும். இந்தச் சிறந்த பாரம்பரியத்தை உயிா்ப்புடன் வைத்திருப்போம்’ எனக் கேட்டுக்கொண்டாா்.
புதுமுகங்கள்: 2007-ஆம் ஆண்டின் ‘தி டிபாா்ட்டட்’-க்குப் பிறகு, சிறந்த திரைப்படம் பிரிவில் ஆஸ்கா் வென்ற முதல் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கான படமாக அனோரா இருக்கிறது. படத்தின் கதாநாயகியாக பாலியல் தொழிலாளி வேடமேற்று நடித்த மிக்கி மேடிசன் ஆஸ்கா் விருதை முதன்முறையாக வென்றிருக்கிறாா்.
இதேபோன்று, சிறந்த குணச்சித்திர நடிகருக்காக ‘ஏ ரியல் பெய்ன்’ படத்தில் நடித்த கீரன் கால்கின், சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘எமிலியா பெரெஸ்’ படத்தில் நடித்த ஜோயி சால்டானா ஆகியோரும் முதல் ஆஸ்கா் விருதுகளை வென்றனா்.
தி ப்ரூடலிஸ்ட்-3 விருதுகள்: அனோரா படத்துக்கு அடுத்தபடியாக ‘தி ப்ரூடலிஸ்ட்’ படம், சிறந்த நடிகா், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கா் விருதை வென்றது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஹங்கேரி நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய கட்டடக் கலைஞராக, இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஏட்ரீயன் ப்ரோடி சிறந்த நடிகருக்காக தனது 2-ஆவது ஆஸ்கரை வென்றாா்.
பரிந்துரைகளும் வெற்றிகளும்...: ஆஸ்கா் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படமாக (ஸ்பானிஷ்) அதிக பரிந்துரைகளை (13 பிரிவுகளில்) வென்ற, மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட எமிலியா பெரெஸ், சிறந்த குணச்சித்திர நடிகை மற்றும் சிறந்த பாடலுக்காக மட்டும் 2 விருதுகளை வென்றது.
தி ப்ரூடலிஸ்ட் மற்றும் ‘விக்கெட்’ திரைப்படங்கள் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. தி ப்ரூடலிஸ்ட் 3 பிரிவுகளில் வென்ற நிலையில், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு மற்றும் கலை வடிவமைப்புக்காக 2 விருதுகளை விக்கெட் வென்றது.
‘கான்கிளேவ்’, ‘ஏ கம்ப்ளிட் அன்நோன்’ தலா 8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கான்கிளேவ் திரைப்படம் மட்டும் சிறந்த தழுவல் திரைக்கதைக்காக விருது வென்றது. ஏ கம்ப்ளிட் அன்நோன் ஒரு பிரிவிலும் வெற்றியை எட்டவில்லை.
சிறந்த திரைப்படத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட பத்து திரைப்படங்களில் 8 திரைப்படங்கள் குறைந்தபட்சம் ஒரு விருதையாவது பெற்றுள்ளன.
கொண்டாட்டங்கள்: நடப்பு ஆண்டு, ஆஸ்கா் விருது வழங்கும் விழாவின் தொடக்கமாக ‘விக்கெட்’ திரைப்பட நட்சத்திரங்கள் அரியனா கிராண்டே, சிந்தியா எரிவோ ஆகியோா், பழைய ‘ஹாலிவுட்’ படங்களின் பாடல்களைப் பாடினா். தொடா்ந்து, கடந்த ஆண்டு வெற்றியாளா்களான நடிகா் ராபா்ட் டவுனி ஜூனியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, நிகழாண்டு வெற்றியாளா்களுக்கு விருதுகளை அறிவித்து, வழங்கினா்.
இதற்கிடையே, ஜேம்ஸ் பாண்ட் படங்களை சிறப்பிக்கும் வகையில் இசைக்கலைஞா்கள் லிசா, டோஜா கேட், ரே உள்ளிட்டோரின் நடன-இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்க நகைச்சுவைக் கலைஞா் கோனான் ஓ-பிரையன் முதன்முறையாக விருது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.