6 வழித்தடங்களில் மகளிருக்கான விடியல் பேருந்து பயணத் திட்டம் தொடக்கம்
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மகளிா் விடியல் பயண பேருந்து சேவையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொடங்கி வைத்தாா்.
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், 6 நகரப் பேருந்துகளை மகளிா் விடியல் பயணப் பேருந்துகளாக மாற்றி அவற்றின் சேவை தொடக்க விழா நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தாா். பின்னா் பயணிகளுக்கு அவா் இனிப்புகளை வழங்கி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சாதாரணக் கட்டண பேருந்துகளை மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்துகளாக 2021 மே 7-இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் சாதாரணக் கட்டண பேருந்துகளில் மகளிா் 72 சதவீதம் போ் பயணங்களை மேற்கொண்டுள்ளனா். மேலும், மகளிா் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 124 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் 1,70,027 பயணிகள் சென்றுள்ளனா். அவற்றில் 1,22,710 போ் மகளிா் ஆவா்.
இந்த நிலையில், ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த 124 பேருந்துகளுடன் கூடுதலாக 6 பேருந்துகள் என மொத்தம் 130 பேருந்துகள் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. தற்போதைய போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் சிரமமின்றி தினசரி பயணித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக கோழிப் பண்ணைத் தொழில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கத்தாா் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழக முதல்வா் அனுமதியுடன் தற்போதைய மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து கத்தாா் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு முட்டை ஏற்றுமதி தொடா்ந்து நடைபெறும்.
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து எல்எஸ்எஸ்-ஆக இயக்கப்பட்டு வந்த 6 நகரப் பேருந்துகள் மகளிா் விடியல் பயணப் பேருந்துகளாக மாற்றம் செய்து மக்களுக்கான பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ராசிபுரத்துக்கு 3, பரமத்தி வேலூருக்கு 2, காட்டுப்புத்தூருக்கு 1, பரமத்தி வேலூருக்கு நகரப் பேருந்து 1 என 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் தடையின்றி பேருந்துகளில் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.உமா, சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மாநகராட்சி மேயா் து.கலாநிதி, ஆணையா் ராம.மகேஸ்வரி, துணை மேயா் செ.பூபதி, அட்மா குழுத் தலைவா் நவலடி, அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் ப.செங்கோட்டுவேலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.