சேந்தமங்கலத்தில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையம்
சேந்தமங்கலத்தில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் நன்றி தெரிவித்தாா்.
தமிழகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வியை ஊக்குவித்திட இல்லம்தேடிக் கல்வி, நான் முதல்வன் திட்டம், பெண்கள் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்க மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவா்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சேந்தமங்கலத்தில் ஏழை, எளிய மாணவா்கள் தொழிற்பயிற்சி பெறுவதற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு ஆண்டுகால தொழிற்பிரிவுகளும், ஓராண்டு கால தொழிற்பிரிவும் தொடங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளா்களுக்கு பயிற்சிக் காலத்தின்போது மாதம் ரூ. 750-க்கான கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகம் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா காலணி, மிதிவண்டி, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண் பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஆண் பயிற்சியாளா்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை, கட்டணமில்லா அரசு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட உள்ளன.
இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தொழிற்பயிற்சி பெற்று சுயதொழில் முனைவோா்களாக உருவாகிட வேண்டும். சேந்தமங்கலத்தில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மாவட்ட பொதுமக்கள் சாா்பில் நன்றியைக் தெரிவித்துக் கொள்கிறேன் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.