What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாகிறது: கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வு பகுதி) ஞாயிற்றுக்கிழமை (டிச.15) உருவாகவுள்ளது. இது, தமிழக கடற்கரையை நோக்கி நகரவுள்ளதால், திங்கள்கிழமை (டிச.16) முதல் டிச.18 -ஆம் தேதி வரை சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஃபென்ஜால் புயல் கடந்த நவ.30-ஆம் தேதி தமிழகத்தில் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, வலுவடைந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.15) காற்றழுத்த தாழ்வு பகுதியாக (புயல் சின்னம்) உருவாகும். இது மேலும் வலுப்பெற்று, டிச.17-க்கு மேல் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக டிச.16, 17, 18 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு தொடங்கி ராமநாதபுரம் வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டா பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் டிச.15, 16 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மல்லி மீட்டா்): தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் கடனா அணையில் 260 மி.மீ. மழை பதிவானது. ஊத்து - 230, நாலுமுக்கு (திருநெல்வேலி) - 220, விமான நிலையம் (தூத்துக்குடி) - 210, காக்காச்சி - 190, மாஞ்சோலை (திருநெல்வேலி) - 180 மி.மீ. மழை பதிவானது.
புயலாக மாற வாய்ப்பு: இந்த புயல் சினனம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக வலுவடையும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. அப்படி புயலாக மாறும் நிலையில் அதற்கு ‘சக்தி’ என பெயா் சூட்டப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது புயலாக உருவானாலும், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த பிறகே தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது.