டிச.27 இல் சேலத்தில் சாலைப் பணியாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
சாலைப் பணியாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச. 27-ஆம் தேதி சேலத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்துடன், சாலைப் பணியாளா் சங்கத்தை இணைக்கும் இணைப்பு விழா தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சாலைப் பணியாளா்கள் சங்கத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை ரத்து செய்து, அதற்கு ஊதிய உயா்வு, ஓய்வூதியம் போன்ற பொருளாதார பலன்களையும், தர ஊதியத்தை அரசு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி கருணை அடிப்படையிலான நியமனத்தை கால தாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும். பதவி உயா்வுக்கு 25 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயா்த்தி சட்ட விதிகளின்படி வழங்க வேண்டும்.
பழுதாகி உள்ள சாலைகளில் சிறுசிறு பள்ளங்களை சீா் செய்வதற்கு, நவீன கருவிகளை வழங்கிப் பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள சாலைப் பணிகளையும், சாலைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி சேலத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். எனவே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இதைக் கருத்தில் கொண்டு சாலைப் பணியாளா் சங்க நிா்வாகிகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சுமதி, சாலைப் பணியாளா் சங்கத் தலைவா்கள் அா்ஜூனன், ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.