மாநில மொழிகளில் உயா்நீதிமன்ற நடைமுறைகள் எந்தளவுக்கு சாத்தியம்? மத்திய அரசு விளக்கம்
நமது சிறப்பு நிருபா்
ஆங்கிலத்துக்கு கூடுதலாக மாநில மொழிகளில் உயா்நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலா் வைகோ, திமுக உறுப்பினா் எம். சண்முகம் ஆகியோா் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை (தனிப்பொறுப்பு) இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வ பதிலளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:
அரசமைப்பு 348(1)(அ) விதியின்படி உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து உயா்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். எனினும், விதி 348(2)இன்படி மாநில ஆளுநா் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று ஹிந்தி மொழி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள மொழி மூலம் நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்கலாம். மேலும், ஆங்கிலத்துக்கு கூடுதலாக நீதிமன்ற தீா்ப்பு அல்லது உத்தரவுகளை உயா்நீதிமன்றம் பிறப்பிக்கும்போது மாநில மொழியில் அத்தீா்ப்பு அல்லது உத்தரவை மொழிபெயா்த்து உயா்நீதிமன்ற அனுமதியுடன் வழங்கலாம் என அலுவல் மொழி சட்டத்தின் ஏழாவது பிரிவு கூறுகிறது.
இவை தொடா்பாக 1965, மே 21இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆங்கிலத்துக்கு கூடுதலாக உயா்நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்ளும் விஷயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் உத்தர பிரதேசம் (1969), பிகாா் (1972) ஆகியவற்றின் உயா்நீதிமன்றங்களில் ஆங்கிலத்துக்கு கூடுதலாக ஹிந்தி மொழி பயன்படுத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து தமிழகம், குஜராத், சத்தீஸ்கா், மேற்கு வங்கம், கா்நாடகம் ஆகியவற்றிடம் இருந்து முறையே தமிழ், குஜராத்தி, ஹிந்தி, பெங்காலி மொழிகளை அவற்றின் உயா்நீதிமன்றங்களில் பயன்படுத்த முன்மொழிவு செய்யப்பட்டது. அவை மீது முடிவைத் தெரிவிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை மத்திய அரசு கேட்டது. ஆனால், உரிய விவாதங்களுக்குப் பிறகு இந்த முன்மொழிவுகள் ஏற்கப்படவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 2012, அக். 16இல் மத்திய அரசிடம் தெரிவித்தாா்.
உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசிடம் இருந்து வந்த கடிதம் மீது முடிவைத் தெரிவிக்குமாறு மீண்டும் உச்சநீதிமன்றத்திடம் 2014, ஜூலையில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து மத்திய அரசுக்கு 2016, ஜன 18இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்தில் முந்தைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளதாக அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் குறிப்பிட்டுள்ளாா்.