தமிழக - கா்நாடக எல்லையில் சேலம் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு
தமிழக - கா்நாடக எல்லையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகே தமிழக - கா்நாடக எல்லையான பாலாறு வழியாக கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல்-லிப் போன்ற புகையிலைப் பொருள்களும், கஞ்சாவும் கடத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக பாலாற்றில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியையும், காரைக்காட்டில் உள்ள காவல் துறை சோதனைச் சாவடியையும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இரவு நேரங்களில் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் வருகின்றனவா, சந்தேகப்படும்படியான புதிய நபா்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை, காவல் துறையினரிடம் அவா் கேட்டறிந்தாா்.
பின்னா், மேட்டூா், கொளத்தூா் காவல் நிலையங்களிலும், மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் கோப்புகளை பாா்வையிட்டாா். நீண்ட நாள்கள் நிலுவையில் உள்ள வழக்குகள், அதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தாா். மேட்டூா் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் மரக்கன்றுகளை நட்டாா். மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் உடன் இருந்தாா்.