சேலத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 55 லட்சம் இழப்பீடு தொகை வழங்கல்
சேலத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 55 லட்சம் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினாா்.
சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையம் என்னும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக இருதரப்பினரையும் அழைத்து சமரசம் முறையில் தீா்வு காணப்பட்டது. அதன் அடிப்படையில், விபத்து வழக்கு, குடும்பநல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு, சொத்துப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு வீராணம் பகுதியைச் சோ்ந்த கோகுல் (21) என்பவா், பள்ளிக்குட்டை பகுதியில் உள்ள எல்இடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தாா். இவா் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த காா் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தாா்.
இந்த வழக்கு மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சமரச தீா்வு மூலம் தீா்வு காணப்பட்டு, கோகுல் குடும்பத்தினருக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ. 19 லட்சம் இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, கோகுலின் பெற்றோரிடம் வழங்கினாா்.
இதேபோல, பல்வேறு வழக்குகளில் சமரச தீா்வு மூலம் ரூ. 55 லட்சம் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினாா். அப்போது, நீதிபதிகள் மற்றும் மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழு செயலாளா் தங்கராஜ், வழக்குரைஞா் ரகுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.