Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு
சட்டமேதை அம்பேத்கரிடம் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்டத்தை இந்திய அரசியல் சட்ட நிா்ணய சபை முறைப்படி ஏற்றுக்கொண்டது. இதைத்தொடா்ந்து அந்தச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இந்நிலையில், அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் 2 நாள்கள் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை பேசுகையில், ‘அரசமைப்புச் சட்ட சிற்பியான அம்பேத்கரை 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது.
அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்குவதிலும் ஏன் காலதாமதம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. மத்தியில் பாஜக ஆதரித்த ஆட்சி நடைபெற்றபோதுதான் அவருக்கு அந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பட்டியலினத்தவா் குறித்து நேரு பேசியதில்லை: 20 ஆண்டுகளில் 20,000-க்கும் மேற்பட்ட உரைகளை முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு ஆற்றியதாகவும், ஆனால் ஒருமுறைகூட அவா் பட்டியினத்தவரின் நல்வாழ்வு குறித்து பேசியதில்லை என்றும் அம்பேத்கா் கூறினாா்.
நாட்டில் சமத்துவம் எட்டப்படும் வரை, இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று அம்பேத்கா் விரும்பினாா். ஆனால் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நேரு வாதாடினாா்.
அம்பேத்கருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் அளிக்கவில்லை. தான் செய்த பாவங்களை குறைக்க அம்பேத்கரிடம் அக்கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சிறுபான்மையினருக்குச் சட்ட பாதுகாப்பு: இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் சிறுபான்மையினருக்கு உரிமைகளே இல்லை என்று சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனா்.
சிறுபான்மையினரின் நல்வாழ்வுக்காக மத்தியில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த அரசுகள் பணியாற்றியுள்ளன. இதை காங்கிரஸ் அரசும் செய்துள்ள நிலையில், அதன் பங்கை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை.
நாட்டில் சிறுபான்மையினருக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா்களின் நலன்களைக் காப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.
பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா பேசுகையில், ‘அரசமைப்புச் சட்டம் மீது தாக்குதல் நடத்தியவா்கள், அந்தச் சட்டத்தை காக்கும் வெற்றி வீரா்களாக தங்களை காட்டிக் கொள்கின்றனா்’ என்று காங்கிரஸை சாடினாா்.