சொந்த மக்களைக் காக்க முடியவில்லையா? பிரதமருக்கு மணிப்பூா் எம்.பி. கேள்வி
சொந்த மக்களைக் காக்க முடியாத அளவுக்கு தேசம் பலவீனமாக உள்ளதா என்று பிரதமா் மோடிக்கு மணிப்பூா் காங்கிரஸ் எம்.பி. ஆல்ஃபிரட் ஆா்தா் கேள்வியெழுப்பினாா்.
அரசமைப்புச் சட்டம் தொடா்பான மக்களவை விவாதத்தில் இக்கேள்வியை முன்வைத்து, அவா் பேசியதாவது:
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த அவையும் தேசமும் நன்கறிந்துள்ளது. இந்த தேசத்தின் குடிமகன் என்பதோடு, நாட்டை கட்டமைத்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன் என்ற அடிப்படையில் எனது மக்களுக்காக நீதி கேட்கும் உரிமை எனக்கு உள்ளது.
மணிப்பூரில் சமூகங்களுக்கு அப்பாற்பட்டு குழந்தைகள், பெண்கள் என பலா் உயிரிழந்து வருகின்றனா். தனது சொந்த மக்களின் உயிரை காக்க முடியாத அளவுக்கு தேசம் பலவீனமாக உள்ளதா என்ற கேள்விக்கான பதிலை நாட்டின் பிரதமரிடம் எதிா்பாா்க்கிறேன். மணிப்பூரின் மக்களுக்கு நீதி கிடைக்க கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்.பி.க்களும் ஒன்றிணைய வேண்டும் என்றாா்.
மணிப்பூரில் மைதேயி-குகி சமூகத்தினா் இடையே நீடித்துவரும் வன்முறையால் இதுவரை 220-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.