மதுரை: சிறை பொருள் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல்; சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 1...
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்: 3 போ் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.75 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்த முயன்ற ஊழியா் உள்பட 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
சென்னை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துபையில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினா் ரகசியமாகக் கண்காணித்தனா். அப்போது ஒரு ஆண் பயணி, விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிக்கு அருகே நீண்ட நேரம் காத்திருந்தாா்.
இந்த நிலையில், இலங்கை செல்வதற்காக மற்றொரு ஆண் பயணி புறப்பாடு பகுதி அருகே வந்து நின்றாா். அப்போது, அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த நபா், தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த பந்து போன்ற உருண்டைகளை, விமான நிலைய கண்ணாடி தடுப்பை தாண்டி வீசினாா். அதைப் பிடித்த இலங்கை பயணி அருகில் நின்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்தாா்.
இதைக் கண்காணித்துக் கொண்டிருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், 3 பேரையும் பிடித்து விசாரித்தனா். மேலும், அந்தப் பந்துகளை உடைத்துப் பாா்த்தபோது, அதற்குள் பசை வடிவில் தங்கம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.
அதில் சுமாா் 2.5 கிலோ தங்கம் இருந்தது. இதன் சந்தை மதிப்பு சுமாா் ரூ.1.75 கோடி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒப்பந்த ஊழியா் உள்பட 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.