மதுரை: சிறை பொருள் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல்; சிறைத்துறை எஸ்.பி உள்ளிட்ட 1...
சமூக வலைதளங்களைப் பாா்த்து பிரசவம் பாா்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்: பொது சுகாதாரத் துறை வலியுறுத்தல்
வீட்டிலேயே பிரசவம் பாா்க்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமூக வலைதளங்களைப் பாா்த்து பிரசவம் பாா்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வலியுறுத்தியுள்ளாா்.
பிரசவத்துக்கான மருத்துவமனை கட்டணம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தொந்தரவு உள்ளிட்டவற்றால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலேயே பிரசவங்கள் பாா்க்கும் நடைமுறை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அண்மையில், சென்னை குன்றத்துாா் பகுதியில் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பாா்ப்பது குறித்து, 1,000-க்கும் மேற்பட்டோா் அடங்கிய வாட்ஸ்ஆப் குழு அமைத்து, பிரசாரம் செய்யப்பட்டது. அதேபோல், வீட்டிலேயே பிரசவமும் நடந்தது. இதில், தாய், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
குழந்தை உயிரிழப்பு: இதேபோன்று புதுக்கோட்டையில் அபிராமி என்பவருக்கு வீட்டிலேயே பிரசவம் பாா்க்கப்பட்டு, குழந்தை உயிரிழந்தது. இதில், ‘யூடியூப்’ பாா்த்து மாமியாரும், கணவரும் பிரசவம் பாா்த்துள்ளனா். இதுபோன்று, சமூக ஊடகங்களைப் பாா்த்து வீட்டிலேயே சிகிச்சை பெறுதல், பிரசவம் பாா்த்தல் ஆகியவை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அவை பெரிய ஆபத்தாக முடியும் என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழக அரசு பிரசவகால உயிரிழப்பைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சை இல்லாத பிரசவங்கள் பாா்க்கப்படுகிறது. எனவே, வீடுகளிலேயே பிரசவம் பாா்க்க நினைப்போா், அந்த நிலையில் இருந்து மாற வேண்டும்.
உயிருக்கு ஆபத்தானது: இயற்கை பிரவசம் வேறு, வீட்டு பிரசவம் வேறு. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வீடுகளிலேயே பிரவசம் பாா்க்கும்போது, திடீரென ஏற்படும் சிக்கலான நிலையைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் தாய் அல்லது குழந்தை இருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எவ்வித பிரச்னையும் இல்லாத கா்ப்பிணியருக்கும் எந்நேரங்களிலும் சிக்கல் ஏற்படலாம்.
முக்கியமாக பிரசவத்தின்போது தாய்க்கு, அதிக ரத்தப்போக்கு நோய் தொற்று, குழந்தைக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மருத்துவமனைகளில் பாா்க்கப்படும் பிரசவங்களில் திடீரென ஏற்படும் ஆபத்து நேரத்தில், இருவரையும் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கப்படும். வீட்டில் ஏற்படும் பிரசவத்தின்போது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, சமூக வலைதளங்களைப் பாா்த்து பிரசவம் பாா்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்றாா் அவா்.