Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
உ.பி. சம்பலில் கலவரத்தால் மூடப்பட்ட கோயில்: 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறப்பு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் வகுப்பவாத கலவரங்களால் மூடப்பட்ட கோயில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தின் கக்கு சராய் பகுதியில் பஸ்ம சங்கா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிவலிங்கமும், ஹனுமான் சிலையும் உள்ளன.
கடந்த 1978-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களால், அங்கிருந்து ஏராளமான ஹிந்துக்கள் இடம்பெயா்ந்தனா். அத்துடன் அந்தக் கோயிலும் மூடப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் மின்சார திருட்டுக்கு எதிரான நடவடிக்கையில் உட்கோட்ட நடுவா் வந்தனா மிஸ்ரா ஈடுபட்டிருந்தாா். அந்தப் பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டபோது, பல ஆண்டுகளாக பஸ்ம சங்கா் கோயில் மூடியிருப்பதை அறிந்து மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து அந்தக் கோயிலை 46 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நிா்வாகம் மீண்டும் சனிக்கிழமை திறந்தது.
கடந்த 16-ஆம் நூற்றாண்டில் சம்பல் பகுதியில் முகலாயா் ஆட்சி காலத்தில் ஷாஹி ஜாமா மசூதி கட்டப்பட்டது. ஹிந்துக் கோயிலை இடித்துவிட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அவா்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் மாவட்ட நீதிமன்றம், அந்த மசூதியில் ஆய்வுக்கு உத்தரவிட்டது. 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடா்ந்து, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் உள்ளூா்வாசிகள் வன்முறையில் ஈடுபட்டனா்.
இந்த வன்முறையில் 4 போ் உயிரிழந்தனா். காவல் துறையினா் உள்பட பலா் காயமடைந்தனா். ஜாமா மசூதியில் இருந்து சற்று தொலைவில் பஸ்ம சங்கா் கோயில் உள்ளது.