ஜன.10-க்குள் 1.77 கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை!
பொங்கல் பண்டிகைக்காக 1.77 கோடி குடும்பங்களுக்கு காலதாமதமின்றி ஜன. 10-ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படும் என கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், அம்முண்டியிலுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவையை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
பொங்கலையொட்டி 1.77 கோடி குடும்பங்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்க உள்ளோம். கடந்தாண்டு மக்களவை தோ்தல் வந்ததால் காலதாமதமானது. நிகழாண்டு காலதாமதமாகாது. வேட்டி சேலைகளை மக்களிடம் வழங்க டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்படும். வருவாய்த் துறையில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு விநியோகிக்கப்படும். ஜனவரி 10-ஆம் தேதிக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்படும்.
இலவச வேட்டி, சேலைகளை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள்தான் உற்பத்தி செய்ய முடியும். அதற்காக ஒப்பந்தங்களும் விடப்படுகிறது. பலா் பல குறைகளை கூறினாா்கள். ஆனால், அரசு தரபரிசோதனை செய்துதான் இலவச வேட்டி, சேலைகளை வழங்குகிறது. 15 ரகங்களில் சேலைகளை வழங்க உள்ளன.
தற்போது துணிகளில் சிறு பாலிஸ்டா் கலப்படம் இருக்கும். ஆனால் முழுவதும் தரமானதாக அளிக்கிறோம். மேலும், 5 ரகமான வேட்டிகளையும் வழங்க உள்ளோம். இந்த ஆட்சியைப்போல் எந்த ஆட்சியிலும் இலவச வேட்டி, சேலைகள் தரமானதாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து சட்டப்பேரவையிலும் கேள்வி எழுப்பினாா்கள். அதற்கு என்னிடம் யாரும் மீண்டும் கேள்வி கேட்கவில்லை.
நூல் விலை உயா்வு இல்லை, கட்டுப்பாட்டில்தான் உள்ளது. காட்டன் காா்பரேஷன் ஆப் இந்தியா கட்டுபாட்டில் நூல் விலை உள்ளது. சைமா என்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று செஸ் வரி நீக்கப்பட்டது. நூற்பாலைகளுக்கு மானியமும் அளித்தோம். இதனால் துணி மில் உரிமையாளா்கள் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனா். மில்களில் இயந்திரங்களை புதுப்பிக்க 8 சதவீத வட்டி வங்கிக்கு செலுத்தினால் 6 சதவீதம் அரசே அளிக்கிறது. நிதிநிலை எப்படி இருந்தாலும் அதனை சரியாக கையாண்டு முதல்வா் அனைத்துத் துறைகளுக்காகவும் சிந்தித்து செயல்படுகிறாா்.
திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து சிறப்பாக பேசுகின்றனா். குரல் எழுப்புகின்ற னா். ஆனால், எதிா்கட்சியினா் மாநிலங்களவையில் எதைப் பற்றியும் பேசுவதில்லை என்றாா்.