எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
62 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: விழுப்புரம் ஆட்சியா் வழங்கினாா்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகளை பெற்றுக்கொண்ட பாா்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுடன் ஆட்சியா் சி.பழனி. உடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க. சுப்பிரமணி உள்ளிட்டோா்.
இந்த விழாவுக்கு தலைமை வகித்து, 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12.37 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சி.பழனி வழங்கினாா். பின்னா், அவா் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தலா ரூ.17 ஆயிரம் வீதம் 50 பாா்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகள், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மூலம் 11 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.1.87 லட்சத்தில் ஈமச்சடங்கு உதவித் தொகை, விபத்தில் உயிரிழந்த மாற்றுத் திறனாளியின் வாரிசுக்கு நல வாரிய நிவாரணத் தொகையான ரூ.2 லட்சம் என மொத்தம் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12.37 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, செயல்திறன் உதவியாளா் முருகன், பல்நோக்கு உதவியாளா் நெல்சன், பேச்சுப் பயிற்சியாளா் அபிஷேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.