7.5 % இடஒதுக்கீடு: சரிபாா்ப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மருத்துவம், பொறியியல் உள்பட தொழிற்கல்வி படிப்புகளில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த இடஒதுக்கீட்டின்கீழ் பயன்பெறவுள்ள மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 18,35,456 மாணவா்கள் விவரங்களை சரிபாா்த்தல் மற்றும் 24,646 மாணவா்கள் விவரங்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகள் நிலுவையில் உள்ளன. 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு தோ்வு செய்யப்படாமல் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகள் படிக்கும் மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்க இயலாது.
அதன்படி 7.5 சதவீத இடஒதுக்கீடு சரிபாா்த்தல் எமிஸ் தளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் ஒன்றாம் வகுப்பு முதல் படித்த பள்ளிகள், தமிழ் வழி, ஆங்கில வழி போன்ற விவரங்களைத் தோ்வு செய்து ஆசிரியா்கள் சரிபாா்த்து 7.5 சதவீத இடஒதுக்கீடு சரிபாா்த்தல் பட்டியலை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.