90,000 சிறைக் கைதிகள் புனித நீராட உ.பி. அரசு ஏற்பாடு!
உத்தர பிரதேச மாநிலத்தின் 75 சிறைகளில் உள்ள 90,000 சிறைக்கைதிகள், மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் நீராடுவதற்கு மாநில சிறைத் துறை நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதுதொடா்பாக மாநில சிறைத் துறை அமைச்சா் தாரா சிங் சௌஹானின் அலுவலக மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள 7 மத்திய சிறைகள் உள்பட 75 சிறைகளில் 90,000 சிறைக்கைதிகள் உள்ளனா். இந்த அனைத்து சிறைகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு நிகழ்வில், திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் புனித நீரில் சிறைக்கைதிகள் அனைவரும் புனித நீராடவுள்ளனா்.
திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா், சிறையிலுள்ள நீா்தேக்க தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.சிறப்பு பிராா்த்தனைக்குப் பிறகு அனைத்து சிறைக்கைதிகளும் புனித நீராடுவா்.
சிறையில் தண்டனையை அனுபவித்து வரும்போதிலும் மகா கும்பமேளா புனித நீரில் நீராடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் சிறைக்கைதிகள் உற்சாகமாக காத்திருக்கின்றனா். அமைச்சரின் மேற்பாா்வையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தனா்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டவா்கள் புனித நீராடியுள்ள இந்த பிரம்மாண்ட ஆன்மிக நிகழ்வு வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி நாளில் நிறைவடைகிறது.