பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!
சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ’விக்கிபீடியா’ இலாப நோக்கமற்ற தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது. இது தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு மூலம் தகவல்கள் எழுதப்பட்டு பராமரிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நபர்கள் இந்த தளத்தில் உள்ளடக்கத்தைப் பதிவேற்றலாம்.
விக்கிபீடியாவில் சம்பாஜி மகாராஜாவைக் குறித்து ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கம் பதிவிடப்பட்டிருந்தாகக் கூறி அதனை நீக்குமாறு விக்கிமீடியா அறக்கட்டளைக்கு மகாராஷ்டிர அரசு மற்றும் சைபர் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிக்க | தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!
அதில், மராத்தியப் பேரரசரான சிவாஜியின் மகனான சம்பாஜி மகாராஜாவைக் குறித்து விக்கிபீடியாவில் தவறான உள்ளடக்கம் இடப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரைப் பின்பற்றுபவர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த உள்ளடக்கத்தை நீக்குமாறும் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த உள்ளடக்கத்தை நீக்குவது தொடர்பாக விக்கிமீடியா சார்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி திரைப்படமான ’சாவா’ சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்த ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.