WPI, CPI Data முடிவுகள் சொல்லும் விஷயம் என்ன | IPS Finance - 260 | Vikatan
Aadhavan: "எம்.ஜி.ஆருக்குப் பிறகு சரோஜா தேவி அம்மாகூட டூயட் பாடினது நான்!"- பகிர்கிறார் ரமேஷ் கண்ணா
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவருடனும் நடித்தவர் என்ற பெருமை 'கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவிக்கு உண்டு.
இவர் தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 'ஆதவன்' படத்தில் நடித்திருந்தார்.

அதுவே இவர் நடித்த கடைசி தமிழ் திரைப்படம். இப்படத்தில் சரோஜா தேவி அம்மாவைக் கொண்டு வருவதற்கு ரொம்பவே விருப்பமாக இருந்தவர் இப்படத்தின் கதாசிரியரும் நடிகருமான ரமேஷ் கண்ணா.
சரோஜா தேவியை தமிழ் சினிமாவுக்கு மறு நுழைவு கொடுக்க வைத்தது பற்றியும் 'ஆதவன்' படப்பிடிப்பு தள நினைவுகள் குறித்தும் நம்மிடையே தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்திருக்கிறார் ரமேஷ் கண்ணா.
வருத்தத்துடன் பேசிய நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணா, "சரோஜா தேவி அம்மாவை எனக்கு சின்ன வயசிலிருந்தே பிடிக்கும். அப்போதிருந்தே அவங்களை அவ்வளவு ரசிச்சிருக்கேன்.
ரொம்ப அழகாகவும் அற்புதமாகவும் நடிக்கக்கூடியவங்க அவங்க. பேசுகிற ஒவ்வொரு வசனத்திற்கும் கச்சிதமான முகபாவனைகளை வெளிப்படுத்தக்கூடியவங்க சரோஜா தேவி அம்மா.
ரொம்ப நாட்கள் இடைவெளிக்குப் பிறகு எங்களுடைய 'ஆதவன்' திரைப்படத்துல அவங்க நடித்தாங்க. என்னுடைய கதையை கே.எஸ். ரவிக்குமார் சார் ஓகே பண்ணினதும் 'சரோஜா தேவி அம்மாவை ஒரு கேரக்டர்ல நடிக்க வைக்கலாம்'னு கேட்டேன்.

சாரும் ஓகே சொன்னதுக்குப் பிறகு அவரே சரோஜா தேவி அம்மாகிட்ட பேசி நடிக்க வைச்சாரு. சரோஜா தேவி அம்மாகூட நடிக்கணும்ங்கிற எண்ணத்துல படத்துல எனக்கு இளையமான் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.
ரவிக்குமார் சார்கிட்ட சொல்லி 'அன்று வந்ததும் அதே நிலா' பாடலுக்கு நான் சரோஜா தேவி அம்மாகூட டூயட் பாடினேன். அந்தக் காட்சியை எடுத்து முடிச்சதும் அவங்ககிட்ட, 'எம்.ஜி.ஆருக்குப் பிறகு உங்ககூட டூயட் பாடின ஒரே நடிகர் இந்த ரமேஷ் கண்ணாதான்'னு சொன்னேன்.
நான் சொன்ன விஷயத்தைக் கேட்டு சிரிச்சிட்டு என்கூட ப்ரண்ட் ஆகிட்டாங்க. முக்கியமாக, மேம்கிட்ட எந்தவொரு பந்தாவும் இருக்காது. கேரவன் இருந்தாலும் வெளியில நாற்காலி போட்டு உட்கார்ந்து எல்லோரிடமும் பேசிட்டேதான் சாப்பிடுவாங்க.
நான் இயக்குநராக சரோஜா தேவி அம்மாவை வச்சு இயக்கணும்னு ஆசை வச்சிருந்தேன். நான் இயக்கிய 'தொடரும்' திரைப்படத்துல ஜெமினி கணேசன் சாரையும், சரோஜா தேவி அம்மாவையும்தான் நடிக்க வைக்க ப்ளான் பண்ணினேன்.
ஆனா, அந்தத் திட்டம் அப்போ மிஸ் ஆகிடுச்சு. அதன்பிறகு, செளகார் ஜானகி அம்மாவை நடிக்க வைச்சேன். பிறகு, பல முயற்சிகளுக்குப் பிறகு 'ஆதவன்' படத்துல நடிக்க வைச்சேன். முக்கியமாக, எப்படி எளிமையாக அன்பாக மத்தவங்ககூட பழகணும்னு மேம்கிட்ட இருந்துதான் கத்துக்கணும்.

சரோஜா தேவி அம்மா தமிழ், தெலுங்கு, கன்னடம்னு அனைத்து சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களோடு நடிச்சாங்க. அப்படியான பெருமை அவங்களுக்கு இருக்கு. அவங்க ஒரு நாள் நான் நடந்து போகிறபோது எனக்காக எழுந்து நின்னாங்க.
பிறகு, நான் அவங்க கையைப் பிடிச்சு உட்கார வைச்சேன். 'நீங்க ஒரு ஆர்ட்டிஸ்ட், உங்களுக்கான மரியாதையைக் கொடுக்கணும்'னு சொன்னாங்க. அனைவருக்கும் மரியாதைக் கொடுக்கணும்ங்கிற எண்ணம் சரோஜா தேவி அம்மாவுக்கு இருந்தது.
'ஆதவன்' படத்துல அவங்களுடைய மேக்கப் பற்றி ஒரு வசனம் இருக்கும். அதுல 'தூக்கத்துலகூட இந்த அம்மா மேக்கப் போடுவாங்க'னு எழுதியிருந்தேன். அதுக்காக என்னை விளையாட்டாகத் திட்டினாங்க. பிறகு, காமெடிக்காகனு நானும் சொல்லி சமாளிச்சேன்." என்றார்.