செய்திகள் :

Adolescence: வளரிளம் பருவத்தினரின் `இரட்டை வாழ்க்கை' - பெற்றோர் அறியாத அபாயங்கள்! | Explained

post image

"நான் உரையாடல்களில் வளர்ந்தேன்; இவர்கள் எமோஜிகளில் பேசுகின்றனர். நான் புத்தகங்கள் படித்தேன் ; இவர்கள் ரீல்ஸ் பார்க்கின்றனர். நான் சுய தேடலில் வளர்ந்தேன்; இவர்கள் ஒப்பிடல்களால் சூழ்ந்திருக்கின்றனர். இந்த தொற்றுநோய் வந்துவிட்டது, நாம் அதை பார்க்காமல் இருக்கிறோம்." நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ஆங்கில லிமிடட் சீரிஸ் அடலசன்ட்ஸ் பற்றிய பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர்.

அடலசன்ட்ஸ் சிரீஸின் கதாசிரியர், இது அனைத்து பள்ளிகளிலும் காட்டப்பட வேண்டும், நாட்டின் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட வேண்டும் எனக் கூறுகிறார். ஏனென்றால், இந்த கதை பேசும் விஷயம் மிகவும் முக்கியமானது, நாளுக்குநாள் மோசமாகிவருவது. உனடியாக தீர்வைக் கோருகின்றது.

Adolescence

ஒவ்வொரு தலைமுறையிலும் அடுத்த தலைமுறை பற்றிய கவலைகள் எழுவது சாதாரணமானதுதான். சொல்லப்போனால் முந்தைய தலைமுறையில் பெற்றோர்களிடம் இப்படி கவலைப்பட தேவையில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் இந்தமுறை விஷயம் வேறுமாதிரியானது.

கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் சில ஆயிரம் அல்காரிதம், தொழில்நுட்ப இஞ்சினியர்கள் கையில் பலகோடி உலக மக்களிடம் தாக்கம் செலுத்தும் சக்தி இருக்கும் முதல் தலைமுறை இது.

Adolescence

அடலசன்ஸ் தொடரில் ஒரு சிறுவன் கொலை குற்றத்தில் ஈடுபடுகிறான். அவன் கொலை செய்த காரணம் உளவியல் ரீதியாக ஆராயப்படுகிறது. கொலை கத்திக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது தொழில்நுட்பத்தின் கோரமுகம்.

ஜேமி மில்லர் தனது 13-வது வயதில் இருக்கிறான். பதின் பருவம் என்பது நாம் வளரும் காலகட்டம் மட்டும்மல்ல, நாம் எப்படிப்பட்ட வளர்ந்த மனிதனாக உருவாக்கப்போகிறோம் என்பதை வடிவமைக்கும் காலகட்டம்.

சுய தேடல், உருமாற்றம், சின்ன சின்ன புரட்சிகள், உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் ஆராயும் ஆர்வம், திறமைகளை வளர்த்துக்கொள்ளும் முடுக்கம், உறவுகளை புரிந்துகொள்ளுதல் என கழியவேண்டியது 10 - 19 வயதுக்கு இடையிலான நாள்கள்.

இதில் உடல் மாற்றங்கள், பாலியல் வளர்ச்சி, அடையாள நெருக்கடி (Identity Crisis) எனப் பலவற்றையும் எதிர்கொள்ள வேண்டும்.

ஜேமியின் வாழ்க்கை சகாக்களின் அழுத்தம், நச்சு-ஆண்மை (toxic masculinity) , ஆன்லைன் தீவிரமயமாக்கல் (Online Radicalization), உணர்ச்சி கொந்தளிப்பு, தாழ்வுமனப்பான்மை, குழப்பம், வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்கிறது.

இது அத்தனையையும் பதின் பருவத்தில் நடக்கும் சாதாரண நிகழ்வுகள் என நாம் கடந்துவிட முடியாது. அப்படிக் கடந்ததன் வெளிப்பாடுதான் 2020-ல் நடந்த பாய்ஸ் லாக்ரும் சம்பவம்.

பிரிவிலேஜ் நிறைந்த சில டெல்லி சிறுவர்கள் (அனைவருக்கும் கிட்டத்தட்ட 15 வயது) ஆபாச படங்கள், பெண்கள், வகுப்பில் உடன் படிக்கும் பெண்கள் பற்றி மிகவும் இழிவாக கருத்துகளைப் பேசியிருந்தனர். பாலியல் வன்கொடுமைகளை மிகவும் நார்மலாக அந்த சிறுவர்கள் பேசியிருந்தது மொத்த சமூகத்தையும் அதிரவைத்தது.

வளரிளம் பருவத்தினர் பெற்றோருக்கு முன் ஒரு வாழ்க்கையும், சமூக வலைத்தளங்களில் மற்றொரு வாழ்க்கையும் வாழ்கின்றனர் என்பதை இந்த சம்பவம் துல்லியமாக சுட்டிக்காட்டியது.

ஆனால் அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? பெற்றோர்கள் ஏற்படுத்திய மாற்றம் என்ன? பள்ளிகள் இந்த பிரச்னைக்கான தீர்வுகளைத் தேடியதா? பாலியல் தொடர்பான எந்த பிரச்னையாக இருந்தாலும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எத்தனை பரவலாக இருந்தாலும், அதை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் எதுவும் நடக்காதது போல கடந்து சொல்லும் சமூகத்துக்கு மற்றொரு அபாய சங்கை ஊதியிருக்கிறது அடலசன்ஸ்.

சமூக வலைத்தளங்களும் டீனேஜர்களும் ஆபத்தான காம்பினேஷன்!

சமூக வலைத்தளங்களின் மிக முக்கிய நோக்கம் மனிதர்களை கனக்ட் செய்வது அல்ல, அதன் முதலாளிகள் பணம் சம்பாதிக்க உதவுவது. எல்லாருக்குமே தெரிந்ததைப் போல தொழில்நுட்ப வியாபாரத்தில் பயனர்கள்தான் விற்பனைப் பொருட்கள்.

6 வயது குழந்தை என்றாலும், 40 வயது நபர் என்றாலும் அவரை அடிமைப்படுத்துவதுதான் (Addict) அல்காரிதத்தின் ஒரே நோக்கம். உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப மூளைகள், அவற்றில் பலகோடி டாலர்கள் கொட்டப்பட்டு உருவான அல்காரிதத்தை எதிர்த்து "பாசிடிவ்வான சமூக வலைத்தள பயன்பாடு" என்ற ஒன்றை செயல்படுத்துவது பெரியவர்களாலேயே முடியாத காரியம் எனும்போது வளரிளம் பருவத்தில் வாழ்க்கையின் வேட்க்கைக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் நிலை என்ன?

Adolescence தொடரைப் பார்த்தபிறகு இந்த ஹைப்பர் கனக்டிவிட்டி தொழில்நுட்பங்களும், வாழ்க்கையில் தினம் தினம் த்ரில் தேடும் வாலிபர்களும் இணையும்போது ஏற்படும் பிரச்னைகள் பற்றி ஆயாசமாக புரிந்துகொள்ள உளவியாளர் அபிநயாவிடம் பேசினேன்.

அபிநயா

குழந்தைகளின் பண்பை தீர்மானிப்பது யார்?

அபிநயா பேசியபோது, "குழந்தைகள் சராசரியாக 8 வயது முதல் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. நம் சமூகங்களிலும் இந்த நிலை எதிரொலிக்க அதிக காலம் எடுக்காது. 10 வயதுக்குள்ளேயே ஆபாசப்படங்கள் கிடைக்கத் தொடங்கிவிடுகிறது.

அந்த குழந்தைகளுக்கு அதை பற்றி எந்தவித புரிதலும் கிடையது. குழந்தைகளுக்காக மொபைலின் செட்டிங்களை மாற்றிக்கொடுக்கும் விழிப்புணர்வு பல பெற்றோர்களுக்கு கிடையாது.

பள்ளிகளில் வீட்டுப்பாடங்களை வாட்ஸ்அப்பில் அனுப்புவது, கூகுளில் தேட சொல்வது என மொபைல் பயன்பாட்டை இன்றியமையாததாக ஆக்குகின்றனர். டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே எளிதாக கிடைப்பதனால் குழந்தைகளுக்கு தேடுவது, முயற்சி செய்வது போன்ற பழக்கங்கள் இல்லாமல் போய்விடுகிறது.

Adolescence

வீட்டுப்பாடங்களை கூகுளில் தேடுகின்றனர், சாட் ஜிபிடியில் விடைகளை காப்பி அடிக்கின்றனர், சுயமாக சிந்திப்பதும் கிரியேட்டிவாக இருப்பதும் குறைந்துவிடுகிறது.

சமூக ஊடகங்களால் ஏற்படும் முக்கிய பிரச்னை, அவர்கள் பத்து ரீல்ஸ் பார்க்கிறார்கள், எல்லாரையும், எல்லாவற்றையும் அந்த பத்து ரீல்களின் அடிப்படையில் ஜட்ஜ் செய்கிறார்கள்.

இந்த ரீல்ஸ்களில் கிடைக்கும் டோபமைனுக்காக தொடர்ந்து பார்க்கின்றனர். அது அவர்களின் ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாம் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ரீல்ஸ்தான் தீர்மானிக்கிறது. குழந்தைகள் அவர்களின் சுயத்தை இழக்கின்றனர்" எனப் பேசினார்.

12 - 17 வயதில் இருக்கும் சிறுவர், சிறுமியர் வெளிப்புறங்களில் இருந்து சொல்லப்படும் விஷயங்களை எளிதாக நம்பவும் சோதித்துப்பார்க்கவும் செய்வார். அது ஒரு நண்பராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம், தொலைக்காட்சியில் வரும் ஹீரோவாக இருக்கலாம்.

ஆனால் இப்போது பெரும்பாலும் ரீல்ஸ் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. எப்படியாவது தங்கள் வீடியோ லட்சக்கணக்கில் லைக்குகளை பெறவேண்டும் என நினைக்கும் இன்ஃபுளூயன்சர்கள். 2021ம் ஆண்டில், யூடியூபில் ஆபாசமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட 'கேமிங் யூடியூபரின்' சப்ஸ்கிரைபர்களில் பலர் பதின்பருவத்தினர் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

வீட்டிலிருந்துதான் மாற்றம் ஏற்பட வேண்டும்

மேலும் தொடர்ந்த அபிநயா, "சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது யார் யாரோ கிண்டல் செய்வதையும், கேலிக்கு உட்படுவதையும் இன்னும் பல நெகட்டிவிட்டிகளையும் சமாளிக்கும் திறன் வேண்டும்.

இதில் சமூக வலைத்தளங்களைத் தாண்டி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வெற்றி தோல்வியை, நிராகரிப்பை எதிர்கொள்ள கற்றுத்தர வேண்டும்.

பெற்றோர்கள் பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் என்ன செய்தாலும் கைதட்ட வேண்டும் என அவசியம் இல்லை. பல பெற்றோர்கள் குழந்தைகள் தோல்வியடையும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல், முகத்தை திருப்பிக்கொள்கின்றனர் (Adolacence தொடரில் வரும் தந்தையைப் போல).

குழந்தைகளும் சரி பெற்றோரும் சரி, ரியாலிட்டியை எதிர்கொள்ள வேண்டும். அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்." என்றார்.

"இளம் ஆண்கள் பெண்களுக்கு எதிராக திரும்புவது, பெண்களை ஆபாசமாக, இழிவாக பேசுவது வீட்டில் இருந்தே தவிர்க்கப்பட வேண்டிய சமாச்சாரம். எனக்கு ஒரு 18 வயது மகன் இருக்கிறான். அவன் எங்கள் வீட்டு பெண்களையும் பிற எதிர்பாலினத்தவரையும் மரியாதையாக பார்க்க நான் கற்றுக்கொடுக்க வேண்டும்.

பெண்கள் மீதான மரியாதை இல்லாதபோது. அவர்களை ஒரு போக பொருளாக மட்டும் பார்க்கும் நிலை இருக்கும்போதுதான் சிறுவர்கள் மோசமான எண்ணங்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.

இன்றைய சமூகத்தில் பாலியல் கல்வியை தவறானதாக காட்சிப்படுத்துகின்றனர். அது எதிர்பாலினத்தவரின் உடல் உறுப்புகளையும் உணர்வுகளையும் கற்றுக்கொள்வது. பாலியல் கல்வியும் போர்ன் வீடியோக்களும் ஒன்று என நினைத்துக்கொள்கின்றனர்.

kid using mobile

அந்த பருவத்தில் கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காதபோது பெண் குழந்தைகளை விட ஆண்கள் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளலாம். இது எல்லாவற்றுக்குமான மாற்றம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்.

வீடு கட்ட வேண்டும், வேலை வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், கல்யாணம் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் பெற்றோர்தான் சக பெண்களை மதிக்க சொல்லிக்கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுடன் மனம் திறந்து பேசுவதுதான் இதற்கான தீர்வு. பெற்றோர்கள் சொல்வதற்கு குழந்தைகள் கீழ்ப்படிய வேண்டும் என நினைத்தால், அவர்கள் அதிகமாக ரசியங்களைக் காப்பார்களே தவிர அவர்கள் வாழ்க்கையில் நடப்பதை உங்களால் யூகிக்கவே முடியாது.

குழந்தைகளுக்கு எப்போதும் வழிகாட்டதான் பெரியவர்கள் தேவை, பருவயதினருக்கு வழங்கும் ஆலோசனைகளால் எந்த மாற்றமும் ஏற்படாது!

நான் எல்லாவற்றுக்கும் சமூக வலைத்தளங்களை குறைசொல்ல மாடடேன். எப்போதும் புதிய தொழில்நுட்பங்களால்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். வீட்டில் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு நன்னெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

நம் சமூகத்தில் இருக்கும் பெற்றோர்கள் குழந்தைங்களின் வெற்றியை குறிவைக்கிறார்கள், ஆனால் வாழ்க்கையை கவனிக்க மறுக்கிறார்கள்.

பதின் பருவ குழந்தைகள் மற்றவர்களின் அங்கிகாரத்துக்கு ஏங்க தொடங்கிவிடுகின்றனர். இதுதான் அவர்கள் கேலிக்கு ஆளாகும்போது மனம் உடைந்துபோக காரணம். பெற்றோர்கள் சுய அன்பை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். Self Love குழந்தைகளை பல பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்!" என்கிறார்.

மெட்டா மங்கீஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம், De-centralized தொழில்நுட்ப உலகம், மாற்று தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என பல விஷயங்களை பேசிவருகிறார் விஜய் வரதராஜ். பல ஆண்டுகள் யூடியூபராக இருக்கும் அவரிடம் குழந்தைகளில் தாக்கம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றி பேசினேன்.

விஜய் வரதராஜ்

இணையம் ✅ சமூக வலைத்தளம் ❌

"ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் 16 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடைசெய்யும் விதமாக சட்டம் இயற்றினர்.

இதற்கு எதிராக பல கருத்துகள் எழுந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தகவல்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை, அவர்கள் பார்க்கும் எல்லாமும் அவர்களை மீறி அவர்களுக்கு காட்டப்படுவதால்தான் தடை செய்வதாக கூறினர்.

அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்ட ஒரு பிரச்னை குழந்தைகள் ஆன்லைனில் கேலிக்கு உள்ளாவது. குறிப்பிட்ட குழந்தையை யாரும் கேலி செய்ய வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை, ஏதோ ஒரு மீமில் பகிரப்படும் கருத்துக்கூட அதை தொடர்புபடுத்திக்கொள்ளும் குழந்தையை பாதிக்கும்.

சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவான விஷயங்களை விட நெகட்டிவான கண்டெண்ட்கள்தான் அதிகம் பார்க்கப்படும். எது அதிகம் பார்க்கப்படுகிறதோ அதைத்தான் அல்காரிதம் முந்தித்தரும். இன்ஃபுளூயன்சர்கள் சில ரீலிஸ் சரியாக பார்ஃபாம் செய்யவில்லை என்றால் நெகட்டிவான கன்டென்டை எடுத்துக்கொள்வர். இங்கு வியாபாரமே இப்படித்தான் இயங்குகிறது.

இணையதளம் 1990 முதல் 2000 வரை மிக நன்றாக De-centralized ஆக இருந்தது. யார் வேண்டுமானாலும் ஒரு பக்கத்தைத் தொடங்கி மையமாக செயல்பட முடியும். நாம் என்ன தேடுகிறோம் என்ற தெளிவுடன் டாட்காம்களை தேட வேண்டும்.

ஆனால் இப்போது மெட்டா, கூகுள், அமேசான், எக்ஸ் ஆகிய பெரும் நிறுவனங்கள்தான் மொத்த இணையத்தையும் கட்டுப்படுத்துகின்றன. எல்லா ஆப்களும் இவற்றின் ஆதிக்கத்துக்கு உள்தான் இருக்கின்றன."

குழந்தைகளுக்கான தொழில்நுட்பம்?

"என் மகள் இப்போது ரீல்ஸ் பார்க்கிறார். அதில் கலர்கலரான பொம்மைகளுடன் வரும் ஒரு வெளிநாட்டு பையன் வைத்திருக்கும் பொம்மைகள் வேண்டும் என்கிறாள்.

அவளைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண குழந்தை அப்படித்தான் பொம்மைகளுடன் இருக்கும். ஆனால் ஷூட்டிங்காக எடுக்கப்பட்டது என்பது அவளுக்கு புரியவில்லை. இதை எப்படி சமாளிப்பது என எனக்கும் தெரியவில்லை.

யூடியூப் கிட்ஸ் என்றொரு ஆப் உள்ளது. அதில் குழந்தைகளுக்கான வீடியோக்கள் மட்டும் வரும். ஆனால் என் குழந்தை அதை பார்ப்பது இல்லை, மொபைலை எடுத்ததும் ரீல்ஸ் பார்க்கத் தொடங்கிவிடுகிறாள். குழந்தைகளுக்கு எந்த செயலியில் எல்லாவற்றையும் பார்க்க முடியும் எனது தெரிகிறது.

யூடியூபைத் தவிர வேறு எந்த நிறுவனமும் குழந்தைகளுக்கான எந்தவித முன்னெடுப்பையும் எடுக்கவில்லை. ஏனெனில் ஏதுவும் குழந்தைகளுக்கானது அல்ல, எல்லா சமூக வலைத்தளங்களும் பயனர்கள் எல்லாரையும் அடிமைப்படுத்தத்தான் முயற்சி செய்யும்.

பதின்பருவ சிறார்கள் பலரும் வயதைக் கூட்டித்தான் அக்கவுண்ட் தொடங்குகிறார்கள். இன்று அதனை மிக எளிமையாக தடுக்கலாம், ஆனால் அப்படிச் செய்வது வியாபாரத்தை பாதிக்கும் என்பதனால் எல்லா சமூக வலைத்தளங்களும் சிறார்கள் எல்லா கண்டெண்ட்களையும் பார்க்க அனுமதிக்கின்றன. ஃபேக் ஐடிகள் தான் அவர்கள் வியாபாரத்தின் முக்கிய பகுதி.

Kid watching youtube

குழந்தைகளை அடிமைப்படுத்துவதாக செயல்படும் சமூக வளைத்தளங்களில் அவர்களை அனுமதித்துவிட்டு, அதனை நல்லதுக்கு பயன்படுத்த முடியும் என நினைப்பது தவறு. ஆஸ்திரேலியாவில் உள்ளதைப் போல எல்லா நாடுகளிலும் சட்டம் கொண்டுவருவது உதவக்கூடும்.

ஏனென்றால் சமூக வலைத்தளங்கள் என்பவை வேறு, இணையதளம் என்பது வேறு. இணையத்தில் குழந்தைகள் படிப்பதற்கும் தெரிந்துகொள்ளவும் பல டாட்காம்கள் இருக்கின்றன. இணையதளம் குழந்தைகள் கல்வியில் உதவலாம், ஆனால் சமூக வலைத்தளங்களுக்கு அடிமைப்படுத்துவதுதான் நோக்கம்.

ஆனால் இங்கு பெற்றோர்களே குழந்தைகள் ரீலிஸ் செய்வதை ஊக்குவிக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இரண்டு வாரம் போதும். ஆனால் அதன்பிறகு தினமும் ஸ்டோரி, போஸ்ட் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

நாம் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதே பெரிய அழுத்தமாகிவிடும். இன்ஸ்டாகிராமுக்காக அல்லாமல் சுயமாக செய்யும் ஒரு விஷயத்தை போஸ்ட் செய்து, அதற்கு சரியாக லைக் வரவில்லை என்றால், நம்மிடம் எதோ தவறு இருக்கிறது என்ற எண்ணம் வந்துவிடும் ஆபத்து உள்ளது." என்கிறார்.

Toxic Masculinity

"jordan peterson என்ற சைக்காலஜிஸ்ட் உலகம் முழுவதும் அறியப்படுபவர். தொடர்ந்து நச்சு-ஆண்மைக்கு (Toxic Masculinity) ஆதரவாக பேசுகிறார் என அவர்மீது குற்றம் சுமத்தப்படுவதுண்டு.

இவர் இண்டெலெக்சுவலாக பேசுபவர். ஆண்கள் மன அழுத்தத்தில் இருக்கக் கூடாது, பெண்களின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க கூடாது எனப் பேசுவார்.

பெண்கள் என்றால் அடங்கி இருக்க வேண்டும், ஆண்கள் என்றால் சண்டையிட வேண்டும், அழக்கூடாது, கோபப்பட வேண்டும், விட்டுக்கொடுக்க கூடாது போன்ற கருத்துகளை பரப்பும் பல இன்ஃபுளூயன்சர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர்.

இவர்களது டார்கெட் ஆடியன்ஸ் பதின் பருவத்தினரும், லவ் ஃபெயிலியரில் இருப்பவர்களும்தான். சரியாக எப்போது யாருக்கு இவர்களது வீடியோக்களைக் காட்ட வேண்டும் எனபது அல்காரிதத்துக்கு தெரியும்!

Man using Social Media

ஒருவர் தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீள மோட்டிவேஷனல் வீடியோக்களை பார்க்கத் தொடங்குவார், அங்கிருந்து ஜிம் வீடியோக்கள் பார்க்க ஆரம்பிப்பார், சில ரீல்களில் ஒரு ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என Toxic Masculinity பேசும் ஒரு வீடியோவை அல்காரிதம் அவருக்கு காட்டும். அது Toxic Masculinity என்பதை புரிந்து கொள்வதற்குள் ஆழ்மனதில் அந்த கருத்துகள் பதிந்துவிடும்.

நாம் பலவீனமாக இருக்கலாம், அழலாம், தோற்றுப்போகலாம் இயற்கையில் இது எல்லாமும் ஆண்களுக்கு இருக்கக் கூடியதுதான் என நான் பாட்காஸ்ட்டில் பேசி வருகிறேன். என் கமெண்டில் பேசுபவர்கள், ஆணாக இருக்கும் இவனுக்கு ஆன்லைனில் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்துப் பேசியிருக்கின்றனர்.

நம் ஊரில் சமூக வலைத்தளங்களைத் தாண்டி, சுற்றி இருப்பவர்களே இதுபோன்ற கருத்துகளைத் திணிப்பதும் உண்டு. குறிப்பாக சாதிய கருத்துகள் சமூகத்தில் இருந்து சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்து, மாணவர்களை மேனிபுலேட் செய்கின்றன."

ஆபாச படங்களைத் தடுக்க முடியாது!

"Porn வீடியோக்கள்தான் இணையதளத்துக்கே விளம்பரம் செய்தன. அப்போது யாரிடமும் பாலியல் கல்வி குறித்த சிறிய புரிதல் கூட கிடையாது. இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்பது எளிமையானதாகவும் இல்லை.

ஆனால் இப்போது கையில் மொபைல் இருப்பதனால் அளவில்லாமல் ஆபாசப்படங்களை பார்க்க முடிகிறது. இன்றும் நாம் பாலியல் கல்வி குறித்து பேசாத தயங்கும் சமூகமாகத்தான் இருப்போம் என்றால், தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இன்றைய பதின்பருவத்தினருக்கு எப்படி காதலிக்க வேண்டும் என்றே தெரியாததற்கு காரணம் ஆபாசப்படங்கள்தான். ஆபாசப்படங்களை தடுக்கவும் முடியாது. கூகுளில் தடை செய்தால் டெலிகிராமில் பரவும், டெலிகிராமில் தடை செய்தால் ட்விட்டரில் வரும். ஆபாசப்படங்களைத் தாண்டி நம் உடலில் உணர்வுகளில் இருக்கும் இன்பம் குறித்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதற்கு பள்ளிகள் முன்வர வேண்டும்.

செக்ஸ் என்ற வார்த்தையை கேடடாலே வீட்டில் அடிப்பார்கள், திட்டுவார்கள் என்றால் சிறுவர்கள் எல்லாவற்றையும் மறைத்து வைக்கவே செய்வர். அது நிச்சயம் அவர்களது மனதை பாதிக்கும்." என்றார்.

porn movies

வீடு ஆரோக்கியமான சூழலில் இருக்க வேண்டும்

"தெரிந்தவர்களின் குழந்தை ஒன்றுக்கு 5 வயதுவரை பேச்சு வரவில்லை என மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். டாக்டர் குழந்தை நன்றாக இருக்கிறது எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறிவிட்டார்.

பொறுமையாக பார்த்தால், அந்த குழந்தை ரீல்ஸ் மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. வீட்டில் அதனிடம் பேச யாரும் இல்லை. யாரையாவது கூப்பிட வேண்டுமென்றால் கையால் தட்டி கூப்பிடுகிறது.

இந்த அளவு மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசாத நிலை ஏற்பட்டுள்ளது. அல்காரிதம் நேரடியாக நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறது. நீங்கள் இன்று ஒரு கார் வீடியோ பார்த்தால், அன்று முழுவதும் உங்களுக்கு கார் வீடியோக்களை காட்டி பார்க்க வைக்கும். உலகமே கார் வீடியோக்கள் பார்ப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருந்தால், கடைசியில் நாம் மட்டும்தான் அந்த கார் வீடியோவைப் பார்த்திருப்போம். தனியனாக!

சிலர் இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இது உங்களை தனிமைப்படுத்தும் ஆபத்தான போக்கு.

பெற்றோர் குழந்தைகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். கண்காணிப்பதாக அல்லாமல் உடன் பயணிக்க வேண்டும். உங்கள் மகன் / மகள் செய்த ரீல்ஸ் லைக் வாங்கவில்லை என்றால் உங்களிடம் வந்துதான் அழ வேண்டும்.

'வீட்டில் தொல்லையாக இருப்பதால்தான் சமூக வலைத்தளங்களுக்கு வருகிறேன்' எனக் கூறிக்கொண்டு ஒரு பதின்பருவ சிறுவன் மொபைலை எடுக்கிறான் என்றால் அவனை யாராலும் காப்பாற்ற முடியாது. வீடு எப்போதும் ஆரோக்கியமான சூழலில் இருக்க வேண்டியது அவசியம்.

அப்படி இருக்கும்போது மற்றவர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மனநிலையும் இருக்காது." எனக் கூறினார்.

Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக கவலையும் மன அழுத்தமும் மிக அதிகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் முடி உதிர்வும் அதிகரித்திருக்கிறது. கவலைப்பட்டால் முடி உதிரும் என்று காலங்காலமாகச் சொல்லப்படுவத... மேலும் பார்க்க