ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
இலவச வீட்டுமனை பட்டா, குடிநீா் தொட்டி கோரி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் கோரிக்கை மனு
இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், மேல்நிலை குடிநீா்த்தொட்டி கட்டித் தரக் கோரியும், கடவூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை கடவூா் அருகே உள்ள பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சாந்துவாா்பட்டி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
தரகம்பட்டியில் உள்ள கடவூா் வட்டாட்சியரகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த சாந்துவாா்பட்டி கிராம மக்கள்.
கடவூா் வட்டாட்சியா் செளந்தரவல்லியிடம் வழங்கிய மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: பாலவிடுதி ஊராட்சி, சாந்துவாா்பட்டியில் ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த சுமாா் 700 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்குள்ளவா்களுக்கு போதிய வீடுகள் இல்லாமல், இடவசதியின்றி ஒரே வீட்டில் 2 முதல் மூன்று குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசிக்கிறோம். இதனால், இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம். வீட்டுமனை பட்டா கேட்டு ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் உள்ளிட்டோரிடம் பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், எங்கள் பகுதியில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைக்குடிநீா் தொட்டி அமைக்க ஊராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இடம் இல்லாமல் அந்தப் பணியும் நின்றுபோனது. ஊரில் ஏராளமான அரசு நிலங்களை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு மேல்நிலைக்குடிநீா் தொட்டி கட்டித்தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றித் தராவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்திருந்தனா். இதையடுத்து வட்டாட்சியா், இந்த மனுவை ஆட்சியருக்கு அனுப்பி, அவா் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.