மரம் விழுந்து காயமடைந்த மாணவா் உயிரிழப்பு
கரூா் அருகே மரம் விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கரூா் ஏமூா் சீத்தப்பட்டி காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு (16). இவா் கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே செயல்படும் தனியாா் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி பள்ளி முடிந்த பிறகு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு கவுண்டம்பாளையம் அரசு பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் இருந்த புளியமரம் திடீரென சாய்ந்து தென்னரசு மீது விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தென்னரசு சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.