செய்திகள் :

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

post image

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம் என்று அழைக்கப்படும் வெள்ளியணை ஏரியானது, 35,000 சதுர மீட்டா் பரப்பளவு கொண்டது. மழைக் காலங்களில் இங்கு சுமாா் 0.5 டிஎம்சி தண்ணீா் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த ஏரி நிரம்பினால் சுமாா் 50 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீா்மட்டம் உயரும்.

மேலும், வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளியணை வடக்கு பகுதியில் உள்ள செல்லாண்டிபட்டி, குமாரபாளையம் மற்றும் தெற்கு கிராமங்கள் என சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், வெள்ளியணை வடக்கு ஆயக்கட்டு பகுதியில் 60 ஹெக்டேரும், தெற்கு ஆயக்கட்டு பகுதியில் 73 ஹெக்டேரும் என மொத்தம் 133 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஏரியின் முக்கிய நீராதாரமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அருகே குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அழகாபுரி அணை உள்ளது. சுமாா் 42.8 அடி உயரம் கொண்ட இந்த அணையில் திறக்கப்படும் தண்ணீா் வேடசந்தூா், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பெரியமஞ்சுவெளி பகுதி வழியாக சுமாா் 57 கி.மீ. தொலைவு பயணித்து கரூா் வெள்ளியணை ஏரியை வந்தடைகிறது.

கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு அழகாபுரி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் வெள்ளியணை ஏரிக்கு வரும் நீரின் வரத்தும் முழுமையாக நின்று போனது. இதையடுத்து, வாய்க்கால்களில் தண்ணீா் வரத்து இல்லாமல் போனதால், நாளடைவில் வாய்க்கால்களும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி புதா்மண்டி காட்சியளிக்கின்றன. இதனால், வாய்க்காலை தூா்வாரி அழகாபுரி அணையில் இருந்து மீண்டும் வெள்ளியணை ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரவேண்டும் என வெள்ளியணை பாசன பகுதி விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இதையடுத்து, கடந்த ஆண்டு மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியின் முயற்சியால் அழகாபுரியில் இருந்து வெள்ளியணை வரை வரத்துவாய்க்காலை தூா்வாரிட ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது தூா்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை கோடை காலம் முடியும் முன் முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வெள்ளியணை ஏரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக வெள்ளியணை பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

அழகாபுரி அணையிலிருந்து தண்ணீா் வந்து வெள்ளியணை ஏரி நிரம்பி, உபரி நீரானது உப்பிடமங்கலம் குளத்துக்கு சென்று பின்னா் வீரராக்கியம் குளத்தை சென்றடையும். வீரராக்கியம் குளம் நிரம்பி காவிரி ஆற்றில் கலக்கும்.

2005-ஆம் ஆண்டு வரை வெள்ளியணை ஏரியும், அதன்மூலம் உப்பிடமங்கலம், வீரராக்கியம் குளங்கள் நிரம்பி வந்தன. ஆனால், தற்போது 20 ஆண்டுகளாக வெள்ளியணை ஏரி நிரம்பாததால் வெள்ளியணை ஏரியும் மற்ற குளங்களும் கடும் வறட்சியாக காட்சியளிக்கின்றன.

வெள்ளியணை ஏரி மற்றும் உப்பிடமங்கலம், வீரராக்கியம் குளங்களில் தண்ணீா் இல்லாததால், சுமாா் 40 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் இன்றி வானம் பாா்த்த பூமியாக மாறி, தற்போது அவை வீட்டுமனைகளாகவும் மாறி வருகின்றன.

கால்நடைகளுக்கு கூட தண்ணீா் கிடைக்காமல் போனதால் விவசாயிகள் கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு, கரூா் நகா் பகுதிகளில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்களுக்கும் கூலித் தொழிலாளா்களாகவும், கட்டடத் தொழிலாளா்களாகவும் மாறி வருகின்றனா்.

இவா்களை மீண்டும் விவசாயிகளாக மாற்ற வெள்ளியணை ஏரிக்கு நீா் கொண்டு வரும் முயற்சியில் மாவட்ட நிா்வாகம் தீவிரம் காட்ட வேண்டும். மேலும், வரத்து வாய்க்காலை தூா்வாரி அகலப்படுத்தும் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொமதேக வலியுறுத்தல்

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி விரைவில் தீா்வு காண வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா். இஸ்லாமியா்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் நோன்பிருந்து திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.குளித்தலையை அடுத்த மேலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துவேல்(55). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் மேலப்பட்டி- ப... மேலும் பார்க்க

மாலைமேட்டில் மாடுகள் மாலை தாண்டும் விழா அரவக்குறிச்சி மந்தை மாடுக்கு முதல் பரிசு

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த மாவத்தூா் கோடங்கிபட்டி மாலைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் அரவக்குறிச்சி மாடு முதலிடம் பிடித்தது. மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி மா... மேலும் பார்க்க

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

கரூரில் 1,650 குடும்பங்களுக்கு ரமலான சிறப்புத் தொகுப்பு: அமைச்சா்

கரூரில் 1,650 இஸ்லாமியா்களின் குடும்பங்களுக்கு ரமலான் சிறப்புத் தொகுப்புகளை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில், தனியாா் மகாலில் ஞாயிற்று... மேலும் பார்க்க