கரூரில் 1,650 குடும்பங்களுக்கு ரமலான சிறப்புத் தொகுப்பு: அமைச்சா்
கரூரில் 1,650 இஸ்லாமியா்களின் குடும்பங்களுக்கு ரமலான் சிறப்புத் தொகுப்புகளை மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
கரூா் மாவட்ட திமுக சாா்பில், தனியாா் மகாலில் ஞாயிற்றுக்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சா் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியா்களின் நோன்பு காலங்களில் மாவட்ட திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி, சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாா். அவரது வழியில் முதல்வா் முக.ஸ்டாலினும் இஸ்லாமியா்களுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் நிறைவேற்றி வருகிறாா். மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானமும் கொண்டு வந்துள்ளாா் நம் முதல்வா். தமிழகத்தில் சிறுபான்மை மக்களுடைய பாதுகாவலராக இருந்து திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறாா். அவருக்கு சிறுபான்மை மக்கள் அனைவரும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கல்வி, மருத்துவம் மற்றும் வேறு உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிா்வாகிகள், திமுகவினா் திரளாக பங்கேற்றனா்.