கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
வீட்டில் மின்கசிவு: டிஎன்பிஎல் ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழப்பு
கரூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் மின்கசிவால் எழுந்த புகையில் சிக்கிய புகழூா் காகித ஆலை பொறியாளா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே கருப்பணகவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் மலையப்பசாமி (44 ). புகழூா் டி.என்.பி.எல். காகித ஆலையில் பொறியாளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் மலையப்பசாமி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது குளியலறையில் இருந்த வாட்டா் ஹீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு அறையில் தீப்பிடித்து பழைய துணிகள் மற்றும் பல்வேறு பொருள்களும் எரிந்தன. இதனால், எழுந்த புகை அறை முழுவதும் பரவியதால் மூச்சுத்திணறி மலையப்பசாமி மயங்கி நிலையில் கிடந்தாா்.
இவரது வீட்டிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுவதை கண்ட மேல்மாடியில் குடியிருந்த பாலாஜி என்பவா் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில் வந்த தீயணைப்பு வீரா்கள் வீட்டுக்குள் எரிந்த அணைத்தனா். மேலும், மயக்க நிலையில் இருந்த மலையப்பசாமியை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மலையப்பசாமி உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.