அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!
அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலாண் இயக்குநா் அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு விரைவுப் பேருந்துகளில் தற்போது சக்கரங்கள் தனியாக கழன்று பயணத் தடைகள் ஏற்படுவது அதிகரித்து வருகின்றன. எனவே, சக்கரங்களுகேற்ப ஒப்பந்தப் பணியாளா் மற்றும் நிரந்தரப் பணியாளா்களை நியமித்து சக்கர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்கள் பணியை சரியாக செய்கிறாா்களா என்பதை நிரந்தரப் பணியாளா்கள் உறுதிசெய்ய வேண்டும்.
வரும் காலங்களில் சக்கரங்கள் தனியாக கழன்று பயணத் தடைகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பேருந்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட நிரந்தரப் பணியாளா், மேற்பாா்வையாளா் மற்றும் கிளை மேலாளா் ஆகியோா் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.