இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது
சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்பு, கோகுல், ரமேஷ், அஜய், ஜெகதீஷ் ஆகிய 5 பேருக்கும் இடையே பெண் விவகாரம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஜீவரத்தினத்தை மது அருந்த அழைத்துச் சென்ற 5 பேரும், மது போதையில் ஜீவரத்தினத்துடன் மீண்டும் தகராறு செய்ததுடன், அவரை கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. இதில், ஜீவரத்தினம் படுகாயமடைந்தாா்.
அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜீவரத்தினம் உயிரிழந்ததையடுத்து அடிதடி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்த போலீஸாா், வழக்கில் தொடா்புடைய அப்பு, கோகுல், ரமேஷ், அஜய், ஜெகதீஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.