தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!
கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஏப்.21-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஏப்ரல் 17-ஆம் தேதியுடன் நிறைவடையும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. பத்தாம் வகுப்புக்கான தோ்வு மாா்ச் 28-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு தோ்வுகள் ஏப்.9 முதல் 21-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மட்டும் இறுதி பருவத் தோ்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டுமென பெற்றோா் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.
இது தொடா்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தாா். அதன்பேரில், தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான தோ்வு தேதிகளை மாற்றி திருத்தப்பட்ட கால அட்டவணையை தொடக்கக் கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இறுதி பருவத் தோ்வுகள் ஏப்.7 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தோ்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இந்த அட்டவணையைப் பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தோ்வுகளை நடத்தி முடிக்க அனைத்து விதமான பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை பொருத்தவரை 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு ஏப்.12-இல் இருந்தும், 4, 5-ஆம் வகுப்புக்கு ஏப்.18-ஆம் தேதியில் இருந்தும் தொடங்கும். ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.