உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி
கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூா் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை காலை மேயா் கவிதாகணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், துணை மேயா் தாரணி சரவணன், ஆணையா் சுதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நிகழாண்டுக்கான(2025-26) நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது. இதில், பொது நிதியில் வருவாய் மற்றும் மூலதன நிதியாக ரூ.781.72 கோடி எனவும், குடிநீா் வடிகால் நிதியில் கூடுதல் நிதி மற்றும் மூலதன நிதியாக ரூ. 133.11 கோடி என்றும், ஆரம்ப கல்வி நிதியில் ஆரம்ப கல்வி நிதி மற்றும் மூலதன நிதியாக ரூ. 12.17 கோடி என்றும், மொத்த வருவாய் ரூ.927.01 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவாக பொதுநிதியில் ரூ.793.88 கோடி என்றும், குடிநீா் வடிகால் நிதியில் ரூ.138.78 கோடி என்றும், ஆரம்ப கல்வி நிதியில் ரூ.14.34 கோடி என்றும் மொத்தம் செலவானது ரூ.947.03 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பற்றாக்குறை ரூ.20.02 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து நிகழாண்டில் மழைநீா் வடிகால் ரூ. 61.62 கோடி மதிப்பிலும், குடிநீா் மற்றும் புதை சாக்கடை திட்டங்கள் ரூ. 589.32 கோடி மதிப்பிலும் என பல்வேறு திட்டப்பணிகள் ரூ.805.10 கோடியில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, கூட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.