Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா இயக்குநர் மீது போலீஸில் மற்றொரு புகார் - தொடரும் சிக்கல்!
இந்தியளவில் தற்போது பேசுபொருளாகியிருக்கும் சினிமா நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். புஷ்பா 2 திரைப்படம் வெற்றிப்பெற்றாலும், பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து எதிர்க்கொண்டுவருகிறார். புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு காவல்துறையின் அனுமதியை மீறி, நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரசிகை ஒருவர் உயிரிழந்ததாகவும் அவருக்கு எதிராகப் புகார் பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்தார்.
அதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்களின் ஒருக் குழு எனக் கூறிக்கொண்ட சிலர், நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களையும் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த விவகாரங்கள் தெலங்கானா மாநிலத்தில் பெரும் விவாதமாகியிருக்கும் நிலையில், தற்போது புஷ்பா படக்குழுவினரான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் அல்லு அர்ஜுன் மீது மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் மற்றொருப் புகார் பதிவு செய்திருக்கிறார் தெலங்கானாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.சி-யுமான தேன்மார் மல்லண்ணா.
இவர் காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், ``புஷ்பா 2 படத்தில் வரும் ஒரு காட்சியில், காவல்துறை அதிகாரி நீச்சல் குளத்தில் விழுந்திருக்கும்போது, அவர்மீது கதாநாயகன் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்த காட்சி சட்ட அமலாக்க அதிகாரிகளின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், அவமரியாதையாகவும் இருக்கிறது. காவல்துறையினரைத் தாக்கும் வகையில் சித்திரித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், ரசிகை உயிரிழந்தது தொடர்பான வழக்கில் விசாரிக்க நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை 11 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகும்படி காவல்துறை சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.