America: `இப்படி நடக்கும்னு நினைக்கல' - ட்ரம்ப் உத்தரவால் பாஸ்போர்ட்டில் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண், பெண் பாலினங்களைத் தவிர, பிற பாலினங்களை ஏற்க மறுப்பவர், அங்கீகரிக்காதவர் என்பது அனைவரும் அறிந்ததே.
அதிபராகப் பதவியேற்றதும் அவர் அடுக்கடுக்காக கையெழுத்திட்ட உத்தரவுகளில், 'இனி அமெரிக்காவில் ஆண், பெண் - இரண்டு பாலினங்கள் மட்டுமே... அதை மாற்ற முடியாது' என்பதும் ஒன்று. இந்த உத்தரவுக்கு பின்னால் இனிமேல் மாற்று பாலினத்தவர்கள் எதற்காவது விண்ணபித்தால், விண்ணப்பித்திருந்தால், அதில் அவர்களது பாலினம் பிறப்பு அடிப்படையில் தான் குறிப்பிடப்படும்.
ஹண்டர் ஷாஃபர், இவர் அமெரிக்காவைச் சேர்ந்த திருநங்கை ஆவார். மேலும், இவர் அமெரிக்காவின் ஹிட் சீரிஸ் டிராமா Euphoria-வில் நடித்த பிரபலமும் ஆவார்.

இவர் தற்போது தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்திருந்ததாகவும், அந்த விண்ணப்பத்தில் அவர் 'பெண்' என்று குறிப்பிட்டிருந்தும், வந்திருக்கும் புதிய பாஸ்போர்ட்டில் பாலினம் 'ஆண்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சியுடன் பேசியுள்ளார். இவர் முன்பு வைத்திருந்த பாஸ்போர்ட்டில் 'பெண்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தபோது பழைய பாஸ்போர்ட் தொலைந்திருக்கிறது. அதனால், புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்லும்போது இந்தப் பாலின வேறுபாட்டால் விமான நிலையத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
அவர் தனது டீன் வயதில் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் பாலினத்தை மாற்றியிருக்கிறார். ஆனால், அப்போது அவர் பிறப்பு சான்றிதழில் மட்டும் பாலினத்தை மாற்றவில்லை. அது தான் தற்போது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
"ட்ரம்ப் இந்த உத்தரவில் கையெழுத்திட்டபோது 'இதை நேரில் பார்க்காமல் நம்பமாட்டேன்' என்றிருந்தேன். ஆனால், இப்போது எனக்கே நடக்கிறது" என்று கூறியிருக்கிறார் ஹண்டர் ஷாஃபர்.
2022-ம் ஆண்டு மாற்று பாலினத்தவர்கள் தங்களது பாலினத்தை 'X' என்று குறிப்பிடலாம் என்று பைடன் உத்தரவிட்டிருந்தார். அந்த நடைமுறை தான் ட்ரம்ப் பதவியேற்கும் வரை பின்பற்றப்பட்டு வந்தது.