மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.73 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
AUS v AFG: குறுக்கிட்ட மழை... அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி; ஆப்கனுக்கு மிஞ்சியிருக்கும் 1% வாய்ப்பு
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில், குரூப் A-ல் இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், குரூப் B-ல் முதல் அணியாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டம் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இதே சூழலில் மோதிய ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் இன்று மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும், அதன்பிறகு நிதானமாக ஆடிய வீரர்கள் செதிகுல்லா அடல் (85), அஸ்மத்துல்லா ஓமர்சாயின் (67) அரைசதங்களால் 50 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான். ஆஸ்திரேலியா தரப்பில் பந்துவீச்சில் பென் துவர்ஷுயிஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேசமயம், மேத்யூ ஷார்ட் விக்கெட் எதுவும் எடுக்கவில்லையென்றாலும் 7 ஓவர்களில் கட்டுக்கோப்பாக வெறும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து, 274 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய ஒப்பனர்களில் மேத்யூ ஷர்ட்டை ஐந்தாவது ஓவரில் 20 ரன்களில் விக்கெட் எடுத்தார் அஸ்மத்துல்லா ஓமர்சாய். அதையடுத்து, டிராவிஸ் ஹெட்டுடன் கைகோர்த்தார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் நடந்தது போன்று தடுமாறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஹெட், அதிரடியாக 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா அணி பவர்பிளேயில் 90 ரன்களைக் குவித்து, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்தது. பின்னர், 12.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது, பெய்ய ஆரம்பித்த மழை மீண்டும் ஆட்டத்தை தொடங்கவிடவேயில்லை. மைதானத்தில் தண்ணீர் தேங்கியது.

இறுதியில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி மொத்தம் நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. குரூப் B புள்ளிப்பட்டியலில் தென்னாபிரிக்க (+2.140) மூன்று புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானை (-0.990) விட அதிக ரன்ரேட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்துக்கெதிரான நாளைய போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்றாலும் எளிதாக அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை, நாளைய போட்டியில் இங்கிலாந்து அணி 300 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை குறைந்தபட்சம் 207 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது தென்னாப்பிரிக்காவின் மினிமம் 300 ரன்கள் என்ற டார்கெட்டை 11.1 ஓவர்களில் அடித்து வெற்றிபெற்றாலோ தென்னாபிரிக்கா வெளியேற்றப்பட்டு ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும். இது நடக்குமா என்பதை நாளைய போட்டியில் பார்க்கலாம்.