லஞ்ச வழக்கில் கைதான முன்னாள் துணைப் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான முன்னாள் துணைப் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் சின்னத்தம்பி (74). இவா் கடந்த 2006ஆம் ஆண்டு தூத்துக்குடி மேலூா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் துணைப் பதிவாளராக பணியாற்றினாா். அப்போது, விற்பனை ஒப்பந்தப் பதிவு தொடா்பாக ரூ. 1,000 லஞ்சம் பெற முயன்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வஷீத்குமாா், குற்றம்சாட்டப்பட்ட சின்னத்தம்பிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜென்சி ஆஜரானாா்.