Dhoni: `தோனியை கேப்டனாக நியமித்தாலும், இந்த அணி..!' - பாக். மகளிர் அணி முன்னாள் கேப்டன்
சொதப்பிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா என தனித்தனியே அத்தனை பேர் போட்டியை வென்று தரக்கூடியவர்களாகத் தெரிந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் தொடர் தோல்விகளை அணி சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் ஐ.சி.சி தொடரிலும் பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய பாகிஸ்தான், முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதோடு, பங்களாதேஷ் உடனான கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றாலும், பங்களாதேஷை விட குறைந்த ரன்ரேட்டால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது பாகிஸ்தான். இதனால், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்றோர் தங்கள் அணி வீரர்களை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
விமர்சிக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்
அதற்கு, தனது சொந்த அணியை விமர்சிப்பது வீரர்களை மேலும் அழுத்தத்துக்குள்ளாக்கும் என்று பாகிஸ்தான் அணிக்கு ஆதரவுக்குரல் கொடுத்த யுவராஜின் தந்தை யோகராஜ் சிங், ``விமர்சிப்பவர்கள் தொலைக்காட்சி வர்ணனையில் அமர்ந்து கொண்டு பேசாமல், அணிக்கு பயிற்சியளியுங்கள். உங்களை இம்ரான் கான் வழிநடத்தினார். இப்போதைய அணிக்கு இம்ரான்கானைப் போன்றவர் இல்லை" என்றார். இந்த நிலையில், பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர், இந்த அணிக்கு தோனியையே கேப்டனாக நியமித்தாலும் எதுவும் நடக்காது என்று விமர்சித்திருக்கிறார்.

கேம் ஆன் ஹை (Game On Hai) நிகழ்ச்சியில் பேசிய சனா மிர், ``சாம்பியன்ஸ் டிராபிக்கு 15 பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு, தோனி அல்லது யூனிஸ் கானை கேப்டனாக நியமித்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் யாரும் அணிக்காக ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் யாரும் விளையாட்டின் சூழ்நிலை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

முதலில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தபோதே நாம் பாதி தோற்றுவிட்டோம் என்று கூறியிருந்தேன். துபாயில் குறைந்தது ஒரு போட்டியாவது ஆட வேண்டும் என்று தேர்வுக்குழு தெரிந்தும், இரண்டு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்தார்கள். ஒருநாள் போட்டிகளுக்கு புதியவரான அப்ரார் அகமது, கடந்த ஐந்து மாதங்களில் 162 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு தொடர்களில் விளையாடிய முக்கிய வீரர்களை தேர்வாளர்கள் நீக்கிவிட்டனர்." என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் வெளியேறியதற்கான காரணம் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
