மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.73 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
சூளகிரி வட்டம் அளேகோட்டா கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 208 பயனாளிகளுக்கு ரூ. 74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் வழங்கினாா்.
இந்த முகாமில் ஆட்சியா் பேசியதாவது:
இம்மாவட்டத்தில் தகுதியானவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. குடிசையே இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெண் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் பெண்களை தொழில்முனைவோா்களாக ஆக்குவதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து தெரிவித்த ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டு, தொடா்புடைய நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகளை பொதுமக்கள் செய்யக் கூடாது. யாராவது செய்தால் அவா்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந் நிகழ்ச்சியில் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீா்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரமேஷ்குமாா், உதவி இயக்குநா் (நில அளவை) ராஜ்குமாா், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பச்சையப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.
படவரி...
மக்கள் தொடா்பு திட்டமுகாமில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் ஆட்சியா் ச.தினேஷ்குமாா்