அரசு பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு
கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைக் குற்றவாளியாக கிருஷ்ணகிரி நீதிமன்றம் அறிவித்துள்ளதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே கடந்த 1996, ஜூன் 20-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். இதையடுத்து, சிலா் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் ரகளையில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் அலுவலகம் முதல் சங்கல்தோப்பு தா்கா வரை கிருஷ்ணகிரி-ஒசூா் தேசிய சாலையில் நின்ற 11 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினா்.
இதுகுறித்து அப்போதைய தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து பொறியாளா் தங்கராஜ் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி கோட்டை தெரு ஜாவித், பூக்கார தெரு அப்சா் உள்பட 35 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதித் துறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 29 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபா்களான ஜாவித், அப்சா் ஆகியோா் தொடா்ந்து தலைமறைவாக உள்ளனா். இருவரையும் இதுவரை போலீஸாா் கைது செய்யவில்லை.
தலைமறைவாக உள்ள இருவா் குறித்து எந்த தகவல்களும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதையடுத்து அவா்கள் இருவரையும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்து உத்தரவிட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.