Basics of Share Market 38: ``ஆக்டிவ் ஃபண்டா... பேசிவ் ஃபண்டா" - எது முதலீட்டிற்கு ஏற்றது?!
நமது மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் அவரின் திறமையால் சந்தையைக் கணித்து முதலீடு செய்வது ஆக்டிவ் ஃபண்ட். சென்செக்ஸ், நிஃப்டி போன்ற குறியீடுகளை மட்டும் பின்பற்றி முதலீடு செய்வது பேசிவ் ஃபண்ட்.
இந்தியாவில் ஆக்டிவ் ஃபண்ட் முதலீடுகளே அதிகம். காரணம், பேசிவ் ஃபண்ட் என்றால் குறிப்பிட்ட கட்டமைப்பில் மட்டுமே 'இதில் முதலீடு செய்ய வேண்டும்... அதில் முதலீடு செய்ய வேண்டும்' என்று முடிவாகி முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், ஆக்டிவ் ஃபண்ட் என்றால் சந்தைகள் எப்படி மாறினாலும், அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது.
ஆக்டிவ் ஃபண்டுகள் ஃப்ளஸ், மைனஸ்
ஆக்டிவ் ஃபண்டுகளை பொறுத்தவரை, சந்தைக்கு ஏற்ப ஃபோர்ட்போலியோவை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். மேலும், சில நேரங்களில், ஃபண்ட் மேனேஜர்களின் திறமையால் பங்குச்சந்தையைவிட, ஆக்டிவ் ஃபண்டுகளில் அதிக லாபம்கூட பார்க்கலாம். ஆனால், இதில் முழுக்க முழுக்க ஃபண்ட் மேனேஜர்களே வேலை பார்ப்பதால் ஃபண்டின் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். முக்கியமாக, சிறிய தவறான முடிவுகள்கூட, அதிக ரிஸ்க்கில் கொண்டு சேர்க்கும்.
பேசிவ் ஃபண்டுகள் ஃப்ளஸ், மைனஸ்
பேசிவ் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, தனியாக ஒருவர் நிர்வாகிப்பதில்லை, அடிக்கடி பங்குகளை வாங்கி, விற்பதில்லை என்பதால் செலவுகள் குறைவு. ஒரு சிஸ்டம் கீழே இது இயங்கி வருவதால் ரிஸ்க்குகள் ஆக்டிவ் ஃபண்டைவிட குறைவு. ஆனால், இதன் இன்னொரு பக்கத்தைப் பார்க்கும்போது, ஆக்டிவ் ஃபண்டை விட, இதில் வருமானம் குறைவு. மேலும், சில நேரங்களில் இழப்புகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. காரணம், இது குறியீட்டின் கீழ் இயங்குவதால், எதாவது சரிவு நிலை ஏற்படும்போது, குறியீடு நாம் முதலீடு செய்திருக்கும் பங்கை நீக்கினால் மட்டுமே ஃபண்ட் மேனேஜரால் அந்தப் பங்கை விற்க முடியும்.
யார் எதில் முதலீடு செய்யலாம்?
ஃபண்ட் மேனேஜரின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆக்டிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அப்படி இல்லாதவர்கள், பேசிவ் ஃபண்டுகளை தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...