செய்திகள் :

BB Tamil 8 Day 105: மகிழ்ச்சி; கண்ணீர்; பிரியாவிடை; கிடைத்த அங்கீகாரம்; பைனலில் நடந்ததென்ன?

post image
‘இந்த வீடு உங்களுக்குத் தந்தது என்ன? வரும் போது எப்படி இருந்தீர்கள், இப்போது என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்? உங்களுடைய பிம்பத்துடன் நீங்களே உரையாடுங்கள்’ என்றொரு டாஸ்க்கை டாப் 5 போட்டியாளர்களுக்கு தந்தார் பிக் பாஸ்.

அந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு மட்டுமானதல்ல. பிக் பாஸின் பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும்தான். இதை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே அணுகினால் நஷ்டம் நமக்குத்தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் நிகழும் சுயபரிசோதனை, அதன் மூலம் கிடைக்கும் அக மாற்றம் போன்றவைதான் இந்த நுகர்வை பயனுள்ளதாக மாற்றும். 

எட்டு சீசன்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். ஆரம்பத்தில் சாதாரணமாக கருதிய இந்த நிகழ்ச்சி, எனக்குள் சின்னச் சின்னதாக நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதே மாதிரியான அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். கிடைத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 105 -  Finale

இறுதிக் கொண்டாட்டத்தின் அத்தனை சடங்குகளும் சுவாரசியமாக அரங்கேறிய வெற்றி விழா இது. இந்த நிகழ்ச்சியில் நான் மிகவும் விரும்பிப் பார்ப்பது போட்டியாளர்களைக் கிண்டலடித்து நிகழும் காமெடி ஷோ. அது சில வருடங்களாக இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. 

BB Tamil 8 Day 105

இந்த சீசனின் போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக வந்து மேடையின் முன்னால் வந்து நிற்க, நிகழ்வு ஆரம்பித்தது. பளபளக்கும் சிவப்பு நிற கோட், சூட்டுடன் பட்டோடபமாக வந்தார் விஜய் சேதுபதி. “இன்றைய ஸ்டார் யாரு?” என்று அவர் மக்களிடம் கேட்க “வின்னர்.. நீங்க..” என்று பதில்கள் வந்திருக்கும் போல. “எல்லோருமே ஃபெயில். அது டிராஃபி. அதை பார்த்துடுவோமா?” என்று அவர் கேட்க, இந்தச் சீசனின் வெற்றிக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. 

அமர்ந்திருந்த போட்டியாளர்களைப் பார்த்த விசே, ‘ஒரு ஆள் குறையற மாதிரி இருக்கே?” என்று டிராமாட்டிக்காக கேட்க ஜாக்குலின் மேடையில் என்ட்ரி. அவருடைய பயண வீடியோ திரையிடப்பட்டது. “உங்க பயத்தைத் தாண்டி வந்து ஆட்டத்தில் பங்கேற்றீர்கள் அல்லவா? அப்போதே நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள். நானா இருந்தா கூட அந்த ஸ்டெப் எடுத்து வெச்சிருப்பனான்னு சந்தேகம்” என்று பாராட்டிய விசே, ‘கராத்தே கிட்’ படத்தின் ஒரு காட்சியையும் மேற்கோள் காட்டினார். 

“சார்.. நீங்க ஒரு முறையாவது பாராட்ட மாட்டீங்களான்னு ஏங்கியிருக்கேன். இந்த அளவு பாராட்டிற்கு நன்றி. வெளில வந்து பார்த்தா மக்களோட அன்பும் கிடைச்சிருக்கு. இந்த ஆட்டத்திற்கு உண்மையா இருந்திருக்கேன். மக்கள் வாக்களிச்சு தொடர்ந்து 15 வாரம் என்னைக் காப்பாத்தியிருக்காங்க” என்ற ஜாக்குலின் அடுத்து சொன்ன பன்ச் அருமை. “ஜெயிச்சவன் சொல்றதைத்தான் பொதுவா கேட்பாங்க. ஆனா ஜெயிக்கணும்ன்னு நெனக்கறவன் சொல்றதைக் கூட மக்கள் கேட்டாங்க”.

ராணவ்வை விடாமல் கலாய்த்த விசே

ஜாக்குலினை போட்டியாளர்களின் நடுவில் அமர வைத்த விசே, அவர்களிடம் உரையாட ஆரம்பித்தார். “உள்ள வந்து பார்த்தாதான் தெரியுது. யாரா இருந்தாலும் அவங்க பார்வையே மாறிடும். நீங்க எது பேசினாலும் ‘இது இவங்க சொன்னாங்க’ன்னு சம்பந்தப்பட்டவர்களுக்கு கிரெடிட் அளிப்பது சிறப்பானது” என்றார் முதலில் பேசிய ஆனந்தி. ராணவ் எழுந்த போது பலத்த கைத்தட்டல். சவுந்தர்யாவைப் போலவே சேட்டைகள் செய்பவர். “நீங்க ஹோஸ்டா இருக்கும் போது என் கரியர் ஸ்டார்ட் ஆகறதுல சந்தோஷம்” என்று ராணவ் பேசி முடிக்கும் முன்னரே ‘இது அப்பட்டமான பொய். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு’ என்று ஜாலியாக கிளம்பி விட்டார் விசே. 

BB Tamil 8 Day 105

பிரேக் முடிந்து திரும்பிய விசே “வீட்டுக்குப் போனப்புறம் என்ன பண்ணீங்க?” என்று கேட்க, “பிரியாணி நிறைய சாப்பிட்டேன்” என்று சாதாரணமான பதிலை தர்ஷா சொல்ல “என் அப்பா கூட இருந்த உறவை புதுப்பிச்சிக்கிட்டேன். அந்த மாற்றத்தை பிக் பாஸ் வீடு கத்துக் கொடுத்தது” என்று மஞ்சரி சொன்னது சிறப்பான ரிப்ளை. “என் தம்பியை (முத்து) ரொம்ப மிஸ் பண்றேன்” என்று தீபக் பாசமாக சொல்ல “டாஸ்க்கை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றார் தர்ஷிகா ஸ்போர்ட்டிவ்வாக. “என்னை உடைச்சுப் போட்ட ஒரு ஆளை வெளிய போனப்புறம் தைரியமா ஃபேஸ் பண்ணேன்” என்றார் அன்ஷிதா. (யார் அது? அர்னவ்வா?!)

“ஓகே.. வீட்டு்க்குள்ள ரொம்ப நேரமா காத்திட்டிருக்கிற டாப் 5 போட்டியாளர்களை பாத்துடலாமா?” என்று விசே கேட்டவுடன், ஆங்கில இதழ்களின் ஸ்டைலான வடிவமைப்பின் செட்அப்பில் போட்டியாளர்களின் போட்டோ செஷன் காட்டப்பட்டது சிறப்பு. ஐவரும் சோபாவில் அமர்ந்திருக்க அவர்களிடம் பேச ஆரம்பித்தார் விசே. “வீட்டை க்ளீன் பண்றேன்னுட்டு என்னோட பொருளையெல்லாம் அனுப்பிச்சிட்டாங்க. பவித்ராவோட டார்ச்சர் தாங்கலை” என்று சிரித்தார் ரயான். முத்து எழும் போது பலத்த கைத்தட்டல். “வரும் போது அடிச்சி பிடிச்சி கப் ஜெயிக்கணும்ன்னு ஆவேசம் இருந்தது. இப்ப என்னடான்னா போயிட்டவங்களை மிஸ் பண்றேன்” என்றார் முத்து. 

பூண்டு சட்னி மூலம் விசேவை இம்ப்ரஸ் செய்த விஷால்


மகாலிங்கம் இசைக்குழுவினர் வீட்டிற்குள் வர, முந்தைய நாளின் இரவில் நடந்த கொண்டாட்ட தருணங்கள் காட்டப்பட்டன. ரஹ்மானின் இசையில் உருவான ‘என் காதலே’ பாடலை  முத்து பாடி, அந்தப் பாடலுக்கு ‘அஞ்சலி’ செய்தார். ‘தல கோதும் இளங்காத்து’ பாடலை சிறப்பாக ஒப்பித்தார் சவுந்தர்யா. விஷாலுக்கு டிரம் வாசிக்கும் திறமை இருப்பது இப்போதுதான் தெரிய வந்தது. 

தர்ஷிகாவின் நடன நிகழ்ச்சி முடிந்ததும், “இந்த வீட்டை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன். டாப் 5 போட்டியாளர்களுக்கு ஒரு பரிசு தருவதற்காக உள்ளே செல்கிறேன்” என்றார் விசே. ‘இந்த வீட்டில் பிடித்த இடம் எது?” என்று அவர் கேட்டதற்கு “ஊஞ்சல்” என்றார் பவித்ரா. “கிச்சன்” என்ற விஷால், பூண்டு சட்னியை ‘திடீர் சமையல்’ பாணியில் தயார் செய்து அதை சாதத்தில் கலந்து விசேவிற்கு ஊட்டி விட்டார். தீபக் அண்ணனுடன் இருந்த படுக்கையை தன்னுடைய ஃபேவரிட் ஏரியாவாக குறிப்பிட்டார் முத்து. ‘கோவா கேங்’ உருவான சரித்திர சம்பவ இடத்தை சுற்றிக் காட்டினார் சவுந்தர்யா. 

BB Tamil 8 Day 105

“நான் வீட்லயே இருக்க மாட்டேன். இருந்தா ‘என்னம்மா உடம்பு சரியில்லையான்னு கேட்பாங்க’ என்று ஜோக் அடித்த சவுந்தர்யா, விசேவின் கவனம் திசை திரும்பியதைப் பார்த்து “முதல்ல இருந்து சொல்லட்டுமா?” என்றார். (என்னம்மா இது சூட்டிங்கா என்ன? ரெண்டாவது டேக் போக?!) “எப்படி திடீரன்னு டேக் ஆஃப் ஆனீங்க?” என்று ரயானிடம் விசாரிக்க அதற்காக முத்துவிற்கு கிரெடிட் தந்தார் ரயான். ஐவருக்கும் புகைப்படங்களை கையெழுத்திட்டு பரிசாக அளித்து மகிழ்வித்தார் விசே. 

ரயான் ஐந்தாவது இடம் - முத்துவிற்கு நெருக்கடி தந்த ஆட்டக்காரன்

விசே விடைபெற்று வெளியேறியவுடன் டாப் 5-ல் இருந்து ஒருவரை எவிக்ட் செய்ய வேண்டிய நேரம் வந்தது. சீட்டு குலுக்கலின் மூலம் ரயான் வெளியேற்றப்பட்ட செய்தி வந்த போது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். முத்துவிற்கு கடுமையான போட்டியைத் தந்த ரயான், ‘வின்னர் ஆவார்’ என்று கருதப்பட்டவர். என்றாலும் வைல்ட் கார்ட் மூலமாக வந்து ஐந்தாவது இடத்திற்கு மின்னல் வேகத்தில் முன்னேறியது சிறப்புதான். மேடைக்கு வந்தவுடன் விசேவுடன் பேசி விட்டு ஜாக் பக்கத்தில் உள்ள இருக்கையை அவர் தோ்வு செய்து அமர்ந்தது சிறப்பு. 

போட்டியாளர்கள் விசேவிடம் கேள்வி கேட்கும் நேரம். “சேஃப் கேம்.. ஆடறதா சொல்றாங்க. உங்க பார்வைல அது என்ன?” என்று தர்ஷா குப்தா கேட்க, அதை விளக்கிய விசே “எல்லோராலயும் சத்யா, ஜெப்ரி மாதிரி இருக்க முடியுமா?” என்று அவர்களை ஊமைக்குத்தாக போகிற போக்கில் குத்தினார். “உங்களை கமல் சார் ஹோஸ்டிங்கோட கம்ப்போ் பண்ணாங்க. சிலருக்கு சப்போர்ட் பண்ணதா சொல்றாங்க” என்கிற துணிச்சலான கேள்வியை ரியா கேட்க “இப்படித்தான் நடக்கும். சவுந்தர்யாவை விஷால் கிண்டல் செய்த விஷயத்தில் அவரை இன்னமும் கூட கடினமாக கேட்டிருக்க முடியும். ஆனால் ஒருவருக்கு தண்டனை கொடுக்கறது என் நோக்கமில்லை. யாரையும் நான் சப்போர்ட் செய்யவில்லை” என்று அவற்றை மறுத்தார் விசே. 

BB Tamil 8 Day 105

ராணவ் எழும் போதெல்லாம் கைத்தட்டல் கேட்கிறது. “எங்க கிட்ட இருந்து என்ன எடுத்துட்டுப் போவீங்க?” என்று வித்தியாசமான கேள்வியை அவர் கேட்க “க்யூட்டா குழப்பம் பண்றது எப்படின்னு கத்துக்கிட்டேன்” என்று அந்தப் பந்தை ராணவ்விடமே திருப்பிடியத்தார் விசே. “அப்புறம் சார். வருங்காலத்துல நீங்களும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்றதுக்கு கூட சூழல் அமையலாம்” என்று விசே சொல்ல மக்களின் உற்சாகமான கூச்சல் கேட்டது. ஒரு இடைவெளி தந்த விசே “அப்படியொரு படமே வேணாம்ன்னு கிளம்பிடுவேன்” என்று விசே அடித்த கிண்டலுக்கு சிரித்தபடி அமர்ந்தார் ராணவ். 

“உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் கிடைச்சா, எவிக்ட் ஆனவங்கள்ல இருந்து யாரைக் காப்பாத்துவீங்க?” என்று தீபக் கேட்க “உங்க எல்லோரையுமே பிடிக்கும்” என்ற விசே அனைத்துப் போட்டியாளர்களின் ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகளை ஒரே மூச்சில்  வரிசையாக சொன்னது சிறப்பான காட்சி. 

முயல் - ஆமை கதையில் முயல் விடை பெற்ற நேரம்


இரண்டாவது எவிக்ஷனுக்கான நேரம். ‘ஒரு காட்டுல சிங்கம், முயல், யானை இருந்துச்சாம்’ என்கிற மாதிரியான கதையை பக்கம் பக்கமாக எழுதி, அதை எக்ஸாம் ஹால் போல தனித்தனியாக அமர வைத்து வாசிக்க வைத்தார் பிக் பாஸ். க்ரூப் ஸ்டடி போல அதை கோரஸாக ‘கடனே’ என்று படித்தார்கள். ‘யப்பா. டேய்.. இந்த ஐடியாவையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா.. ஒரே வரில சொல்ல வேண்டியதுதானே?’ என்பதாக அவர்களின் மைண்ட் வாய்ஸ் இருந்திருக்கலாம். 

கதையின் இறுதியில் பவித்ராவிற்கு மட்டும் ஸ்பெஷலான வரி இருந்தது. எனவே பவித்ரா என்கிற முயலின் பயணம் அத்துடன் நிறைவு பெற்றது. இன்முகத்துடன் அதை ஏற்றுக் கொண்டு கிளம்பினார் பவித்ரா. ‘கதையே புரியலையே?” என்ற சவுந்தர்யாவிடம் “அதனாலதான் கதையா எழுதி வெச்சிருக்காங்க” என்று கிண்டலடித்தார் முத்து. 

BB Tamil 8 Day 105

மேடைக்கு வந்த பவித்ரா, “என் வளர்ச்சிக்காக, என் கரியருக்காக உள்ளே வந்தேன். ஆனா என்னை எனக்கே இந்த வீடு புரிய வெச்சிருக்கு”என்று நெகிழ்ந்தார். “ஏன் இந்த இடத்துக்கு வந்தீங்கன்னு ஒரு ஐடியா இருக்கா?” என்று விசே கேட்க “ரொம்பவே பொறுமையா இருந்துட்டேன். பொறுமை நல்ல குணம்தான். ஆனா பேச வேண்டிய இடத்துல பேசியிருக்கணும்” என்று வாக்குமூலம் தந்தார் பவி. 

வீட்டிற்குள் இருந்த டாப் 3 போட்டியாளர்களிடம் பேசிய விசே “உங்களுக்காக ஒரு பொருளை உள்ளே அனுப்பிச்சிருக்கேன். பாருங்க” என்றார். அது வெற்றிக் கோப்பை. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ என்கிற மாதிரி ‘இதுக்காகத்தானே இத்தனை போராட்டம். இந்தக் கோப்பையுடன் உரையாடுங்கள். அப்போதுதான் அது உங்களிடம் வரும்” என்று பிக் பாஸ் சொல்ல, மூவருமே தங்களின் ஆத்மார்த்தமான உரையாடலை கோப்பையுடன் நிகழ்த்தினார்கள். 

“நீ வெறும் கோப்பையல்ல. மக்களுடைய அன்பின், அங்கீகாரத்தின் அடையாளம். இதுக்காக நிறைய போராடியிருக்கேன். என்னை வந்து சேர்வாய் என்று நம்புகிறேன்” என்றார் முத்து. “சில பசங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்” என்று கப்புடன் ரொமான்ஸ் செய்தார் விஷால். “என்னை பிடிச்சா வா.. இல்லைன்னா போய் தொலை” என்கிற மாதிரி காமெடி செய்தார் சவுந்தர்யா. 

போட்டியாளர்களுக்கு சிறப்பு விருதுகள்

எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு விருது வழங்கும் நேரம். ‘காப்டன் ஆஃப் தி சீசன்’ என்கிற விருது யாருக்கு என்பதை யூகிப்பது சிரமமில்லை. அது தீபக். “உங்களாலதான் இது கிடைச்சது” என்று சக போட்டியாளர்களிடம் அந்தப் பெருமையைப் பகிர்ந்து கொண்டார் தீபக். ‘மாஸ்டர் ஆஃப் ஸ்ட்ராட்டஜி’ விருது ரவிக்கு கிடைக்கும் என்று பார்த்தால் அது ஆனந்திக்காம். 

‘அட்டென்ஷன் சீக்கர்’ விருது யாருக்கு? வேறு யார்.. நம்ம ராணவ்தான். “எல்லோருமே அதுக்காகத்தானே வந்தோம்?” என்று ராணவ் வாதாடிப் பார்க்க, சார்.. இது காம்பிமெண்ட் சார். நீங்க பொழக்க தெரிஞ்ச குழந்தை. நமக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களைத்தானே உரிமையா கிண்டல் பண்ணுவோம். அப்படித்தான் இது” என்று சமாதானம் செய்தார் விசே. 

BB Tamil 8 Day 105

‘டாஸ்க் பீஸ்ட்’ என்றதுமே ரயான் எழுந்த வர “உங்க பேரையே சொல்லலையே.. ஏன் வந்தீங்க?” என்று கலாய்த்த விசே, ‘போங்க சார்..’ என்று வெளியே அனுப்பினார். பிறகு சிரித்துக் கொண்டே ‘வாங்க சார்… உங்களுக்குத்தான்’ என்று விருதை தந்து சபையை கலகலப்பூட்டினார். ‘கேம் சேஞ்சர்’ என்கிற பொருத்தமான விருது மஞ்சரிக்கு கிடைத்தது. 

‘சூப்பர் ஸ்ட்ராங்’ என்கிற விருதை ஜாக்குலினுக்கு தந்த விசே “இந்த லாஸ்ட் பென்ச்சர்ஸ் கலாட்டா பண்ணுவாங்கள்ல.. அந்த மாதிரி சத்யாவும் ஜெப்ரியும் நீங்க போகும் போது ஒரு கலாட்டா பண்ணாங்க” என்று போட்டுக் கொடுக்க “தள்ளி நின்னு அடிக்கறவங்களைப் பார்த்திருக்கேன். கூடவே நின்னு அடிச்சிருக்காங்க” என்று அடிபட்ட முகத்துடன் ஜாக் சொல்ல “அய்யோ.. ஜாக்.. அது உங்களைப் பார்த்து சிரிக்கலை. சிலர் பொய்யா அழுதாங்க. அதுக்காக” என்று சத்யா விளக்கம் சொல்ல “அதுதான் உண்மை” என்று விசேவும் வழிமொழிந்தார். 

இருளில் மூழ்கிய பிக் பாஸ் வீடு - விடைபெற்ற டாப் 3 போட்டியாளர்கள்

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. “என்னைப் போலவே மழைக்கும் உங்களை வெளியே அனுப்ப மனமில்லை” என்று சந்தில் சிந்து பாடிய பிக் பாஸ், “இந்த வீட்டின் விளக்குகள் இப்போது அணைக்கப்படும். அந்த இருள் உங்களின் வருங்கால வாழ்க்கைக்கு வெளிச்சமாக அமையும். இந்த வீட்டின் கதவுகள் மூடிக் கொள்ளும். அது உங்களின் வெற்றிக்கு திறவுகோலாக அமையும்” என்று கவிதை மொழியில் உருக்கமாகப் பேசி விடைபெறுவதற்கான வார்ம்-அப்பை சிறப்பாக செய்தார். “தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வெளிப்படையாக சொன்னது இந்த சீசன்லதான். எனக்கு நல்ல பெயரை சம்பாதிச்சுக் கொடுப்பீங்கள்ல?” என்று பிக் பாஸ் கேட்க “சத்தியமா பாஸூ” என்று தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்தார்கள். 

‘சமூகவலைத்தளங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அவற்றில் உங்களின் அங்கீகாரத்தை தேடாதீர்கள்” என்று பிக் பாஸ் சொன்னது முற்றிலும் உண்மை. மூன்று போட்டியாளர்களும் வீட்டின் வாசலில் வந்து நிற்க, விளக்குகள் ஒவ்வொன்றாக அணைந்து ஒட்டு மொத்த வீடும் இருளில் மூழ்கியதைப் பார்க்க நமக்கே அத்தனை நெகிழ்வாக இருந்தது. மூவரும் மேடையை நோக்கி நகர்ந்தார்கள். 

BB Tamil 8 Day 105

மேடையில் அவர்களை வரவேற்ற விசே, பெற்றோர்களுடன் பேசிய காட்சிகள் சுவாரசியமானவை. அதிலும் விஷாலின் அப்பா நிறைய கலகலக்க வைத்தார். “பாருங்க. சார். வந்தவுடனே பெத்தவங்களை கூட பார்க்கலை. அந்தப் பக்கம் பார்த்து கைகாட்றான்” என்று அவர் ஜாலியாக சொல்ல “ஐ லவ் யூப்பா” என்று ஐஸ் வைத்து சமாதானம் செய்ய முயன்றார் விஷால். “அதெல்லாம் செல்லாது” என்று விஷாலின் அப்பா மறுக்க “பாருங்க விஷால். உங்க லவ்வை உங்க அப்பாவே நம்பலை” என்று சந்தடி சாக்கில் விசே பங்கம் செய்தது சுவாரசியமான காட்சி. (தர்ஷிகா இந்த ஜோக்கை மிகவும் ரசித்திருப்பார்!). விஷாலின் அப்பா துறுதுறுப்பாக பேசியதைப் பார்த்து “அடுத்த வருஷம் நீங்க உள்ளே வாங்க சார்” என்று விசே சொன்னது ஜாலியான குறும்பு. 

வெளியில் போனதும் என்ன செய்வீர்கள் என்று விசே கேட்க “எவ்வளவோ பார்த்துட்டம். இதை பார்க்க மாட்டமா?” என்கிற ரேஞ்சில் இருந்த சவுந்தர்யா “தியேட்டர்ல போய் படம் பார்க்கணும்” என்றார். (விஷ்ணு கூடவா?!) “வீட்டுக்கு வந்து சோ்த்துப்பீங்களா” என்று சவுண்டின் அப்பாவிடம் விசே கேட்க “சோ்த்துதானே ஆகணும்” என்று அவர்  கூலாக பதில் அளித்தார். “எங்க அப்பா அம்மா கூட நிம்மதியா ஒரு வாரமாவது உக்காந்து வாழணும்” என்றார் முத்து. 

“பொண்ணுக்கு பரிசு கிடைக்கட்டும். பார்க்கலாம்” - கலகலக்க வைத்த சவுண்டின் அப்பா


பரிசுப்பணத்தை என்ன செய்வீங்க என்கிற வழக்கமான கேள்வியை விசே கேட்க “எங்க அப்பா கிட்ட கொண்டு போய் அப்படியே கொடுத்துடுவேன். அவரா பார்த்து ஏதாவது கொடுத்தா வாங்கிக்குவேன்” என்று சமர்த்துப் பிள்ளை போன்ற பாவனையுடன் சொன்னார் சவுந்தர்யா. “முதல்ல வரட்டும் சார்.. அப்புறம் பார்த்துக்கலாம்” என்று யதார்த்தமாக பதில் சொன்னார் சவுண்டின் அப்பா. “ஏன்.. சார்.. உங்க பொண்ணு மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லைன்னா எப்படி?” என்று விசே குறுக்கிட்டது சுவாரசியம். 

“வீடு பாதில நிக்குது. கடன் இல்லாம அதை முடிக்கணும். நண்பர்களுக்கு உதவணும். நா.முத்துக்குமாரோட புத்தகங்கள் நிறைய வாங்கி பள்ளி, சிறைக்கூடம் போன்ற இடங்களில் பரிசாக வழங்கணும்” என்று சிறப்பாகச் சொன்னார் முத்து. “இவ்ள பணத்தை ஒருசேர பார்த்தில்ல. எங்க அப்பா பார்த்திருப்பாரு. ஒரு கார் வாங்குவேன். எங்க அம்மாவுக்கு நகை வாங்கி அழகு பார்ப்பேன். சினிமாவுக்குள்ள எந்தத் துறையா இருந்தாலும் போய் சாதிக்கணும்ன்னு கனவு இருக்கு. அதுக்கு என்னை தயார்ப்படுத்திக்கணும்” என்று யதார்த்தமாகப் பேசினார் விஷால். 

BB Tamil 8 Day 105

“உங்க பையனைப் பத்தி என்னம்மா நெனக்கறீங்க?” என்று முத்துவின் அம்மாவிடம் விசாரித்தார் விசே. அப்போது அவர் அளித்த பதில் சிறப்பானது. இளம் தலைமுறையினர் உணர வேண்டியது. “கையில போன் இல்லாம இருந்தான். எனவே புத்திசாலியா இருந்தான்” என்கிற மாதிரி சொன்னார் முத்துவின் அம்மா. முத்து மற்றவர்களின் மண்டையைக் கழுவுவது பற்றி சவுந்தர்யா ஜாலியாகச் சொல்ல “விளங்காதவங்களுக்கு புரிய வெச்சான். அதுக்குப் பேரு பிரெயின் வாஷ் இல்ல. அப்புறம் அவங்களே நன்றி சொன்னாங்களே?” என்று லாஜிக்கலாக இதை எதிர்கொண்டார் முத்துவின் அம்மா. 

“சவுந்தர்யா பண்ற ரியாக்ஷன்லாம் பிரெண்ட்ஸ் கிட்ட மட்டும்தான். வீட்ல கிடையாது. ஆனா ஒரு வேலையும் செய்ய மாட்டா. இங்க செஞ்சா” என்று மகளை சபையில் போட்டுக் கொடுத்தார் சவுண்டின் அம்மா. “எங்க பையன் வெளில எப்படியோ.. அப்படியேதான் இங்கயும் இருந்தான். துளியும் மாறலை. மாற வேண்டியது நான்தான். மாறிட்டேன். அவன்தான் என்னை மாத்தினான்” என்று கண்கலங்கினார் விஷாலின் அப்பா. 

மூன்றாவது இடம் - விஷால்


மூன்றாவது எவிக்ஷனுக்கான நேரம். “இங்க எடுக்கற முடிவுகள் அனைத்தும் மக்களின் கையில்தான் இருக்கு. இப்பவும் அப்படித்தான். நீங்க உக்காந்திருக்கிற சேர்களில் ஒன்றின் அடியில் கவர் இருக்கும். அதைக் கொண்டு வாங்க” என்றார் விசே. அப்படியாக ஓர் இருக்கையின் அடியில் இருந்த உறையில் இருந்த பெயரை பிரித்துக் காட்டினார் விசே. அது விஷால். “நம்ம மூணு பேருக்கு ஒரு ஒத்துமை இருக்கு. மத்தவங்களை சிரிக்க வைக்கற திறமை இருக்கு. அதை கடைசி வரை தக்க வெச்சுப்போம்” என்று சக போட்டியாளர்களை வாழ்த்தி விடை பெற்றார் விஷால். 

BB Tamil 8 Day 105

வெற்றியாளர் யார் என்கிற சஸ்பென்ஸ் உடையும் நேரம். டாப் 2-ல் இருந்தவர்கள் முத்து மற்றும் சவுந்தர்யா. சானல் சார்பில் வந்தவர்கள் இந்தச் சீசனின் வெற்றியைப் பற்றி சொல்லி விட்டு ‘புதிய ஹோஸ்ட்’ ஆன விஜய் சேதுபதி எப்படி இதற்குள் வந்தார் என்பதை பகிர்ந்து கொண்டது சுவாரசியம். “நான் பிக் பாஸ் பார்க்கறதில்லை. எனக்குப் பிடிக்காது” என்பதுதான் விசேவின் முதல் பதிலாக இருந்ததாம். பிறகு போகப் போக அவரே உள்ளே இறங்கி ஐடியாக்கள் தர ஆரம்பித்து விட்டாராம். எல்லோருக்கும் பயண வீடியோ போட்டுக் காண்பித்த விசேவிற்கே ஒரு வீடியோவை தயார் செய்து அசத்தினார்கள். ‘அடுத்த வருஷம் சந்திக்கிறேன்’ என்று புத்தாண்டு சமயத்தில் விசே ஜோக் அடித்த காட்சி இந்தச் சமயத்தில் பொருத்தமாக இருந்தது. அடுத்த சீசனுக்கும் அவரே ஹோஸ்ட் ஆக வருவார்.

“நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் மாதிரி இதை ஒப்புக் கொண்டேன்” என்று சிரித்தார் விசே. “இதன் மூலம் எனக்குள்ளும் சுயபரிசோதனை நடந்தது. மாற்றங்கள் நடந்தது. நோ்மறையான அலைவரிசை உணர்ந்தேன்” என்ற விசே “இது கமல் சார் போட்ட பாதை. அதில் நான் இலகுவாக பயணம் செய்தேன்” என்று கமல்ஹாசனை நினைவுகூர்ந்தது சிறப்பு.

இந்த சீசனின் வெற்றியாளர் யார்? முத்துவா.. சவுண்டா?

வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்க வே்ணடிய நேரம். முத்து மற்றும் சவுந்தர்யாவின் கைகளை உயர்த்தி சற்று நேரம் சஸ்பென்ஸாக பேசிய விசே, அதிகமாக நேரத்தை இழுக்காமல் “இந்த சீசனின் வெற்றியாளர்” என்றபடி முத்துவின் கையை உயர்த்தினார். கணிசமானவர்கள் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த முடிவுதான் என்றாலும் அது சாத்தியமானதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். 

“தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு பெருமைப்படுத்திட்டீங்க. எங்களுக்கெல்லாம் சென்னைன்னா பயம். சினிமான்னா பயம். அப்படியொரு கிராமத்துல இருந்து வந்த பையன், சாதிச்சிருக்கான்னா..இது எல்லாராலயும் முடியும்” என்று முத்துவின் அம்மா உணர்ச்சிகரமாகப் பேசியது இந்தச் சமயத்தில் பொருத்தமாக இருந்தது.

முத்துவின் அம்மா பேச, அதைப் பற்றி விசே பாராட்டிப் பேச, சந்தடி சாக்கில தன்னுடைய கோப்பையை சவுந்தர்யாவிடம் காட்டுவதற்காக சென்றார் முத்து. “நான் இங்க பேசியே முடிக்கலை. அதுக்குள்ள என்ன?” என்று ஜாலியாக கலாய்த்தார் விசே. சவுந்தர்யாவிடம் முத்துவின் வெற்றி பற்றி அவர் விசாரிக்க “நான் கூட என் கையைத்தான் தூக்கிடுவீங்களோன்னு பயந்துட்டேன். அப்படி ஆகியிருந்தா என் அப்பாவே என் கிட்ட இருந்து பிடுங்கி முத்து கிட்ட கொடுத்திருப்பாரு” என்று அந்தச் சமயத்திலும் ஜோக் அடித்தார் சவுண்டு. “முத்து இந்த விருதிற்கு தகுதியானவர்” என்று சவுந்தர்யா சொன்னது சிறப்பு. 

BB Tamil 8 Day 105

“இது என்னோட வெற்றியல்ல. எங்க 24 பேரோட வெற்றி. பிக் பாஸ் டீமின் உழைப்பு இதற்குப் பின்னால் இருக்கிறது. ஏழ்மையான நிலையிலும் அந்த இருட்டான சூழலில் கூட தன்னம்பிக்கையையும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ஒரு பெண்மணியின் வெற்றி இது. அது எங்க அம்மா. அவங்க எனக்கு கத்துக் கொடுத்தது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று தமிழ். இரண்டு உழைப்பு. அதுதான் இந்த உயரத்திற்கு என்னைக் கொண்டு வந்தது” என்று விருதிற்கான ஏற்புரையை சிறப்பாக வழங்கினார் முத்து. 

பணப்பெட்டி டாஸ்க்கில் வென்றவர்களின் தொகை போக, எஞ்சியிருந்த 40,50,000/- (ரூபாய் நாற்பது லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும்) கிஃப்ட் டாக்ஸ், டிடிஎஸ் தொகை பிடித்தம் போக)-கான பத்திரம் முத்துவிற்கு வழங்கப்பட்டது. “நீங்கள் இதைக் கொண்டாடுங்கள். அடுத்த வருடம் சந்திப்போம்” என்று விசே விடைபெற்றுக் கொள்ள முத்துவை அனைத்துப் போட்டியாளர்களும் சூழ்ந்து வாழ்த்து சொல்ல நிகழ்ச்சி நிறைவுற்றது. 

தகுதியான போட்டியாளருக்கு கிடைத்த அங்கீகாரம்

விருதுகளும் பரிசுகளும் எப்போதுமே பாராட்டிற்கு மட்டுமல்ல, சர்ச்சைகளுக்கும் ஆளாகக்கூடிய விஷயம். பிக் பாஸை பொறுத்தவரை ஏறத்தாழ அனைத்து சீசன்களிலும் வின்னர் குறித்த சர்ச்சைகளும் அதிருப்திகளும் எழுந்திருக்கும். ஆனால் இந்த எட்டாவது சீசனைப் பொறுத்த வரை கணிசமான சதவீத பார்வையாளர்கள் எதிர்பார்த்தபடியே முடிவு அமைந்திருக்கும் என நம்புகிறேன். 

‘பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது?’ என்கிற தலைப்பில் வெறுமனே அங்கு நடந்ததை மட்டும் விவரிப்பதில் எப்போதுமே எனக்கு விருப்பம் இருந்ததில்லை. இந்த நிகழ்ச்சியின் ஊடாக வெளிப்படும் பல்வேறு மனித உணர்வுகளின் ஊசலாட்டங்களில் பார்வையாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உண்டு என்று நம்புபவன். சிறிது பயன்பெற்றவனும் கூட. எனவே அந்த நோக்கில் உறுத்தாமல் பல விஷயங்களை இடையிடையே கலந்து எழுதியிருக்கிறேன். அவற்றைக் கவனித்து உணர்ந்து வாசித்தவர்களுக்கு என் பிரத்யேகமான நன்றி. 

BB Tamil 8 Day 105

பிக் பாஸ் தமிழ் ஆரம்பித்ததில் இருந்து இந்த எட்டாவது சீசன் வரை இந்த நிகழ்வைப் பற்றி எழுதுவதற்கான இடமும் வாய்ப்பும் தந்து முழு சுதந்திரத்தையும் வழங்கிக் கொண்டிருக்கும் விகடன்.காமிற்கு என் மனமார்ந்த நன்றி. இந்தத் தொடரில் வெளியான அத்தனை சொற்களுக்கான பொறுப்பும் என்னுடையது மட்டுமே. அந்த அளவிற்கு முழு சுதந்திரத்தை அளித்தார்கள். அதை நானும் பொறுப்போடு பயன்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். 

இந்தத் தொடரை தினமும் வாசித்தவர்களுக்கும் பின்னூட்டப் பெட்டியில் தங்களின் கருத்துக்களை பிரதிபலித்தவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. குறிப்பாக என்னுடைய எழுத்தின் மூலமாக துளியாவது இன்ஸ்பயர் ஆகி மனமாற்றம் அடைந்தவர்கள் எவரேனும் உ்ண்டெனில் அவர்களுக்கு பிரத்யேகமான நன்றி. இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் நண்பர்களே. அதுவரை உங்களிடமிருந்து மகிழ்ச்சியுடனும் பிரியத்துடனும் விடைபெறுகிறேன். 

- சுரேஷ் கண்ணன்

`மிஸ்டர் ஜெய் ஆகாஷ் ரசிகர்களுக்கு..' - `நெஞ்சத்தைக் கிள்ளாதே' தொடர் சர்ச்சை குறித்து கண்டித்த ரேஷ்மா

`நெஞ்சத்தைக் கிள்ளாதே'ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர் `நெஞ்சத்தைக் கிள்ளாதே'. ஜெய் ஆகாஷ் கதாநாயகனாகவும், ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். ஹிந்தியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற படே அச்சே லக... மேலும் பார்க்க

BB Tamil 8: ``காயப்படுத்திய அவர் என் வாழ்க்கைக்குத் தேவையில்லை" - அன்ஷிதா

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' நேற்று ( ஜனவரி 19) இரவு நடைபெற்றது. மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்ச... மேலும் பார்க்க

ஜமீன் குடும்பம்; சினிமா; லவ் மேரேஜ்; பிரிந்து சென்ற கணவர் - ‘சுந்தரி அப்பத்தா’ பர்சனல்ஸ்

சின்னத்திரை பாட்டிகளிலேயே ட்ரெண்ட் செட்டிங் பாட்டி சுந்தரி சீரியலில் வந்த அப்பத்தா பி.ஆர் வரலட்சுமி அவர்கள்தான். அந்த சீரியல் முழுக்க துறுதுறுன்னு நடிச்ச அவங்களோட பர்சனல், சினிமா என்ட்ரி, அடுத்து என்ன... மேலும் பார்க்க

Bigg Boss 8 Grand Finale: "எங்க அம்மாதான்; அவங்க சொல்லிக் கொடுத்த..." - நெகிழ்ந்த முத்து

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட... மேலும் பார்க்க