செய்திகள் :

BB Tamil 9 Day 17: ‘ஏண்டா.. என் சாப்பாட்டை சாப்பிட்டே?” - திவாகரிடம் பாருவின் ருத்ர தாண்டவம்

post image

‘வெறும் சத்தம் போடற இடமா இந்த வீட்டை மாத்திடாதீங்க’ என்று முன்பே உபதேசம் செய்தார் விஜய் சேதுபதி. தலையை பலமாக ஆட்டிய போட்டியாளர்கள், இன்றளவும் அதையேதான் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

இன்றைய எபிசோட் முழுவதும் சண்டையின் சத்தம்தான். தீபாவளி நாளன்று வெடித்த பட்டாசு சத்தத்திற்கு இணையாக வீடு முழுவதும் ஒலி மாசு தாறுமாறாக எகிறியது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 17

ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும். என்னதான் பாருவின் அலப்பறையும் நெகட்டிவிட்டியும் ஓவராக இருந்தாலும் அவர் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட்டே இருக்காது. அந்த அளவிற்கு காமிராக்கள் அவரது முகத்தை நோக்கியே குத்த வைத்து உட்கார்ந்திருக்கின்றன. கோபம், வன்மம், நயவஞ்சகம், நக்கல் என்று அனைத்து சீரியல் வில்லிகளையும் தோற்கடித்து விடும் வகையில் வித விதமான எக்ஸ்பிரஷன்களில் பின்னியெடுக்கிறார்.

BB Tamil 9 Day 17
BB Tamil 9 Day 17

ஆனால் இது போன்ற நெகட்டிவ் பிம்பத்திற்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள்? பிக் பாஸ் வீட்டில் வேறு விஷயங்களே நடக்கவில்லையா? ஏன் பிக் பாஸ் டீம் சண்டைகளை மட்டுமே ஆவலாக தேடித் தேடி ஒளிபரப்புகிறது?! அதைத்தான் பார்வையாளர்கள் உள்ளூற விரும்புகிறார்களா?

இன்றைய எபிசோடில், பாருவின் ஸ்ட்ராட்டஜியை விக்ரம் சிறப்பாக டீகோட் செய்தார். “பாருவுக்கு என்ன செய்யறோம்ன்னு நல்லா தெரிஞ்சிருக்கு. தன்னைச் சுற்றித்தான் எல்லாம் நடக்கணும்னு இத்தனை அலப்பறை பண்றாங்க. நாமளும் அவங்களுக்கு முக்கியத்துவம் தந்து ஏத்தி விடறோம். இதை உடைக்கணும். அவங்களோட வாட்ச் டைமை குறைக்கறதுக்கு நாம முயற்சிக்கணும். அதுக்கு நாம சுவாரசியமா கன்டென்ட் தரணும். வெறுமனே கத்தறது மட்டுமே இந்த நிகழ்ச்சி இல்ல. பார்வையாளர்களுக்கு போரடிச்சிடும்” என்று சபரியிடம் விக்ரம் சொல்லிக் கொண்டிருந்தது, புத்திசாலித்தனமான வாதம்.

பிக் பாஸ் வீடும் நம்ம வீடும் ஒண்ணுதானே?

ஆனால் இத்தனை புத்திசாலித்தனமாக யோசிக்கிற விக்ரம், தனது நகைச்சுவை பங்களிப்பை வழங்குகிறாரா? புகழ் பெற்ற ஸ்டான்அப் காமெடியரான விக்ரம், வினோத் செய்யும் அளவிற்கு கூட காமெடி செய்யவில்லையே?!

பிக் பாஸ் வீட்டின் கொந்தளிப்பான சூழலில் பெரும்பாலோனோர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் போது சமநிலையுடன் இயங்குபவர்களாக சபரி, விக்ரம், கனி போன்றோரைச் சொல்லவேண்டும். ஆனால் வீட்டு தலயான பிறகு கனியிடமும் பொறுமை போய்விடுகிறது. அந்தளவிற்கு பாரு உள்ளிட்டவர்களின் அலப்பறை அதிகமாக இருக்கிறது.

ஒருவகையில் பிக் பாஸ் வீட்டில் நிகழும் சண்டைகளும், சர்ச்சைகளும், ஆவேசமான வாதப் பிரதிவாதங்களும் நம்முடைய வீடுகளின் பிரதிபிம்பங்கள்தான். அவற்றை யாரும் காமிராவில் பதிவு செய்து தொகுத்து நமக்குக் காண்பிக்காத காரணத்தினால் நமக்கு உறைப்பதில்லை. “என்னய்யா.. இப்படி அடிச்சுக்கிறாங்க” என்று பிக் பாஸ் வீட்டை பார்த்து நாம் முகம் சுளித்தாலும் நம்முடைய வீடுகளிலும் ஏறத்தாழ அதே விஷயங்கள் நிகழ்வதை கவனிக்கலாம்.

ஒரு சிறிய விஷயத்தில்கூட ஒற்றுமை இல்லாமல் பயங்கரமான சண்டை. தன்னுடைய குரல் மட்டுமே ஒலிக்கவேண்டும் என்கிற பேராசை. குழு மனப்பான்மை, பிரிவினைவாதம், அகங்காரம் என்று மனிதனின் ஆதாரமான குணங்கள் இந்த வீட்டில் பீறிட்டு வெடிக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய பாடம் இதுவே.

BB Tamil 9 Day 17
BB Tamil 9 Day 17

அதிகாரத்தை வைத்து பாரு செய்த அலப்பறைகள்

‘வேலை செய்ய மாட்டோம்’ குழுவில் இப்போதைக்கு பாருவும் வியன்னாவும் பலமான கூட்டணியில் இருக்கிறார்கள். “சாப்பாட்டை வெச்சு என்னென்ன பண்றாங்கன்னு பாரேன்” என்று வியன்னா நீட்டி முழக்க “அப்படிச் சொல்லு தங்கம். தலயை எதிர்க்கக்கூட நமக்கு உரிமை இருக்கு” என்று பின்பாட்டு பாடினார் பாரு.

நாள் 17 காலை. பிக் பாஸ் வீட்டில் அடித்துக் கொள்ளும் சம்பவங்கள் ஏற்கெனவே நிறைய நடப்பது போதாது என்று ‘அட்ரா.. அட்ரா’ என்கிற வரிகள் வருவது போன்ற பாடலை ஒலிபரப்பி உசுப்பி விட்டார் பிக் பாஸ்.

QC அதிகாரி என்கிற பதவி கிடைத்தாலும் கிடைத்தது. அதை வைத்து பாரு செய்யும் அலப்பறை தாங்கவில்லை. ‘ஒரு மனுஷன் கிட்ட அதிகாரம் கிடைச்சா, அந்த அதிகாரம் அவனை என்னவிதமால்லாம் மாத்துது’ என்று விஜய்சேதுபதி சொன்னதற்கு சரியான உதாரணம் பாரு. இந்தப் பதவியை வைத்து தனக்கு வேண்டாதவர்களையெல்லாம் கட்டம் கட்டி பழிவாங்கும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.

‘எல்லாவற்றிலும் நொட்டு, நொள்ளை சொல்லும் நபர்தான் QC வேலைக்கு தகுதியானவர்’ என்கிற விதியின்படி பாருவை மெஜாரிட்டியில் தேர்ந்தெடுத்தது ஒரு வகையில் சரி. ஆனால் தீர்ப்பளிக்கும் பொறுப்பை பாருவிடம் தந்தால் அவர் நிச்சயம் கோக்குமாக்காக பழிவாங்குவார் என்பதை போட்டியாளர்கள் உணரவேயில்லையா? அல்லது அப்படி நடப்பதுதான் பிக் பாஸின் பிளானா?

எது எப்படியோ, QC பதவியின் மூலம் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். பாருவின் மீது பார்வையாளர்களுக்கு இருக்கிற வெறுப்பு இன்னமும் அதிகமாகலாம். அப்படிப்பட்ட ஆள் இருந்தால்தான் கன்டென்ட் என்பதால் அத்தனை சீக்கிரம் அவரை வெளியே அனுப்பமாட்டார்கள்.

ஓயாத சண்டை - உடையும் மண்டை - ரணகளத்தில் பிக் பாஸ் வீடு

இன்னொன்று திவாகருக்கு பார்வையாளர்களின் ஆதரவு அதிகரிக்கலாம். அவரும் கூட தனக்கு வேண்டாதவர்களை கட்டம் கட்டுகிறார் என்றாலும் பாரு போல மொத்தமாக பழிவாங்கவில்லை. “ஏ பாவம்ப்பா.. கஷ்டப்பட்டு வேலை செய்யறாங்க.. அதை ரிஜக்ட் செய்யலாமா.. நாம தப்பு பண்ணக்கூாது” என்று சற்றாவது மனச்சாட்சியுடன் பேசுகிறார் திவாகர். “சும்மா இருய்யா.. யோவ். நான் சொல்ற இடத்துல மட்டும் கையெழுத்து போடு.. போதும். நீ ஒண்ணும் யோசிச்சி கிழிக்க வேணாம்” என்று அவரை அதட்டுகிறார் பாரு. திவாகரின் இந்த நல்லெண்ணம், அனுதாபம் காரணமாக அவருக்கு ஆதரவு வாக்குகள் அதிகரிக்கலாம்.

“எனக்கு குடிக்க தண்ணி வேணும்” என்று ஆதிரை அலப்பறை செய்ய “இவ்வளவு அதிகாரமா கேட்டா தர முடியாது” என்று பாரு ஆவேசமாக மறுக்க காலையிலேயே கலவரம் ஆரம்பம். ஒவ்வொருவரிடமும் மல்லுக்கட்டி சமாதானம் செய்வதற்குள் கனிக்கு அவர் சின்ன வயதில் சாப்பிட்ட காரக்குழம்பு எல்லாம் வெளியே வந்து போலிருக்கிறது. “ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க” என்று பாருவிடமும் வியன்னாவிடமும் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

BB Tamil 9 Day 17
BB Tamil 9 Day 17

கேஸ் லைட்டரை எஃப்ஜே கையில் எடுத்ததால் அடுப்பு பற்றிக் கொண்டதோ, இல்லையோ, சண்டை பற்றிக் கொண்டது. பிரவீனுக்கும் எஃப்ஜேவிற்குமான சண்டை பரவி கெமிக்கும் தொற்றிக் கொண்டது. ‘சமையல் செய்ய மாட்டோம். ஸ்ட்ரைக்’ என்கிற வழக்கமான ஆயுததத்தை எடுத்தார் கெமி. இத்தனை களேபரம் நடந்து கொண்டிருந்தாலும் படுக்கையில் சபரி நிதானமாக தியானம் செய்து கொண்டிருந்த காட்சி சிறப்பானது.

கனியக்கா கொடுத்த தோப்புக் கரணம் தண்டனையை பாரு நிறைவேற்றிய விதம் இருக்கிறதே?! அடடா! உலகிலுள்ள நடனக் கலைஞர்கள் அனைவரும் அதைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். தோப்புக் கரண தண்டனையை கதம் நடன பாணியில் வித்தியாசமாக நிறைவேற்றி ‘விஸ்வரூபம்’ கமலுக்கே டஃப் பைட் கொடுத்தார் பாரு. “ரொம்ப என்டர்டெயினிங்கா இருந்தது” என்று வெறுப்பை மறைத்துக்கொண்டு பாராட்டினார் கனி.

ஒரு பக்கம் கோபத்தில் எஃப்ஜே கத்த, இன்னொரு பக்கம் பாரு புலம்ப, வாஸ்து மூலையில் கண்ணீர் வீட்டுக் கொண்டிருந்த கெமியை சபரி சமாதானம் செய்ய.. ஒரே கூத்தாக இருந்தது.

QC அதிகாரிகளுக்கு கூடுதல் பவர் - அடுத்த கலவரம் ஆரம்பம்

சபையைக் கூட்டிய பிக் பாஸ், QC அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரத்தைத் தந்தார். அவர்கள் ஜூஸ் ஃபேக்டரிக்கு சென்று சோதனை செய்யலாம் என்பது உள்ளிட்ட அதிகாரத்தை தந்தார். பைத்தியம் பிடித்த குரங்கிற்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்த கதையாக இது ஆனது. பாருவின் அலப்பறை இதனால் இன்னமும் கூடியது. இதுதான் பிக் பாஸின் நோக்கம்போல.

பாட்டில்கள் வந்தன. முதலில் ஓடிய பிரவீன் நிறைய பாட்டில்களை அள்ளி, தேன்நிலவு மனைவிபோல இறுக்கமாக கட்டிக் கொண்டு வந்தார். “டேய்.. என் பேண்ட் அவுருது.. நவுந்துடுங்க. இல்லைன்னா உங்களுக்குத்தான் அசிங்கமா போயிடும்” என்று கூட்டத்தில் கத்திக் கொண்டிருந்தார் விக்ரம்.

எஃப்ஜேவை நோண்டினால் எளிதில் பற்றிக்கொள்ளும் என்கிற டெக்னிக் பாருவிற்கு தெரிந்திருப்பதால் அவருடைய கடையின் மீது ஏறி அமர “நீங்க அதிகாரியா இருக்கலாம். ஆனா உங்க டிக்கியை இங்க பார்க் பண்ணாதீங்க” என்று எரிச்சலை அடக்கிக் கொண்டு பணிவாக சொன்னார் எஃஜே. “நீ ரொம்ப சேட்டை பிடிச்சவனா இருக்கியே.. என் ஏரியாவுக்கு வருவேல்ல. அங்க வெச்சுக்கறேன்” என்று ரிவேன்ஜ் மோடை உற்சாகமாக ஆன் செய்தார் பாரு.

BB Tamil 9 Day 17
BB Tamil 9 Day 17

தனக்குக் கிடைத்த திடீர் அதிகாரத்தை, பாரு வன்மமாக மாற்றினார் என்றால், திவாகர் அதை உற்சாகமாக மாற்றிக்கொண்டார். “எனக்கு முட்டை தொக்கு பண்ணித் தர்றவங்களுக்கு நானும் பதிலுக்கு கவனிப்பேன். உங்க பாட்டில்கள் அப்ரூவ் செய்யப்படும்” என்று லஞ்ச பேரம் பேச, முதலாளிகள் அதை உடனடியாக ஒப்புக் கொண்டார்கள்.

ஒருவர் கையை அமுக்க, இன்னொருவர் காலை அமுக்க.. ‘ஆங். இங்க பூசு.. ஆங்.. அங்க பூசு.. காந்தக் கண்ணழகி.. உனக்கு மினிஸ்ட்ரில இடம் பார்த்து வெக்கறேன்’ என்கிற கவுண்டமணி காமெடி மாதிரி இந்த வாழ்க்கையை சொகுசாக கொண்டாடினார் திவாகர்.

இப்படி லஞ்ச கலாசாரத்தை அதிகாரிகள் ஆரம்பிப்பதும் அதற்கு முதலாளிகள் உடன்படுவதும் விசாரணை நாளில் கண்டிக்கப்படும் என்று எதிர்பார்ப்போம். (சும்மா லுலுவாய்க்குதான்.. நடைமுறையில் இதை ஒழித்து விட முடியுமா?!)

‘ஏண்டா.. என் சாப்பாட்டை சாப்பிட்டே?” - பாருவின் ருத்ர தாண்டவம்

திவாகருக்கு கிடைத்த ராஜ உபச்சாரம், பாருவை வயிறெரியச் செய்தது. “டேய். நான்தான்டா சீனியர் அதிகாரி.. அவன் வெறும் அப்ரண்டீஸ்.. என்னை முதல்ல கவனிங்க..” என்று முட்டை தொக்கு உபச்சாரத்தை தானும் எதிர்பார்த்தார். எனவே அவருக்கும் கை கால் மசாஜ் விருந்தோம்பல் நடந்தது. தனது எதிரிகளுள் ஒன்றான சுபிக்ஷாவை அழைத்து கை. கால் அமுக்கச் சொல்லி ஆசையை தீர்த்துக்கொண்டார் பாரு.

QC ஆபிசர் என்கிற பதவியை வைத்துக்கொண்டு தனக்கு வேண்டாதவர்களிடம் அலப்பறை தந்தார் பாரு. இதனால் ஆதிரைக்கு கோபம் வர சண்டை வந்தது. இந்த சைடு கேப்பில் பார்வதியின் உணவையும் சேர்த்து திவாகர் சாப்பிட்டுவிட “ஏன்யா.. யோவ்.. உனக்கு ஏதாவது அறிவிருக்கா. எனக்கு வெச்ச சாப்பாடை சாப்பிடறே.. வெக்கம், மானம், சூடு ஏதாவது இருக்கா” என்று சகட்டுமேனிக்கு திவாகரை ஏசினார் பாரு. ‘அண்ணே’என்று பாரு அழைத்தாலும் அது ‘யோவ்’ என்கிற டோனில்தான் ஒலிக்கிறது.

BB Tamil 9 Day 17
BB Tamil 9 Day 17

ஆனால் பாருவின் வசைபாடுதலுக்கு எல்லாம் திவாகர் அலட்டிக் கொள்ளாமல் ‘அடுத்து ரசம் எடுத்தாங்கப்பா.. இலை காயுதுல்ல..’ மோடில் கூலாக இருந்தார்.

பாருவிற்கு கோபம் வந்துவிட்டால் ஒரே வசனத்தை ரிப்பீட் மோடில் கத்துவது வழக்கம். அது அவரது மேனரிசமாக இருக்கலாம். ஆனால் நமக்குத்தான் காதிற்குள் பத்திருபது தேனீக்கள் புகுந்து விட்டது போல் ‘ஙொய்’ என்கிறிருக்கிறது. திவாகர் சாப்பாட்டை எடுத்து தின்று விட்டதும், அவருக்கே முதல் மரியாதை கிடைப்பதும் பாருவை பயங்கரமாக காண்டாக்கியிருக்க வேண்டும். எபிசோடின் இறுதி வரை திவாகரை திட்டி தீர்த்தார். போதாக்குறைக்கு திவாகருக்கு அதிக மரியாதை தந்து பாருவை வேண்டுமென்றே வெறுப்பேற்றியது, பிக் பாஸ் வீடு.

‘பாரு - திவாகர் மோதல்' - குஷியில் பிக் பாஸ் வீடு

எஃப்ஜேவை கடுப்பேற்றுவதற்காக ‘உழைப்பை உறிஞ்சும் முதலாளிகள்” என்கிற புரட்சிகர வசனத்தை ரிப்பீட் மோடில் பாரு கத்த ‘வளர்ந்து வரும் இளைஞர்களை குறை சொல்லாதே’ என்று துணிச்சலாக எதிர்க்குரல் தந்தார் திவாகர். அவருக்கு கிடைத்த விருந்தோம்பல் அப்படி.

“இந்த திவாகர் இருக்கற வரைக்கும் ஒண்ணுமே பண்ண முடியாது. என்ன நடந்தாலும் சரி, எஃப்ஜே பாட்டிலை அப்ரூவ் செய்ய மாட்டேன்” என்று கொலைவெறியில் கத்திக் கொண்டிருந்தார் பாரு. “உன் ஆட்டத்திற்கு நானும் தாளம் போடணுமா.. உன் கேமை நீ ஆடு.. என்னை விடு” என்று திவாகரும் பதிலுக்கு கத்தியது ஆச்சரியம். (சிட்டிக்கு கோபம் வர ஆரம்பிச்சிடுச்சு மொமன்ட்!)

BB Tamil 9 Day 17
BB Tamil 9 Day 17

முட்டை சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சுபிக்ஷா பணிவாக வந்து சொல்லியதும் “ஏண்டா.. என் சாப்பாட்டை எடுத்தே?” என்று மறுபடியும் திவாகர் மீது பாய்ந்த பாரு, கோபத்தில் சாப்பாடு வேண்டாமென்று சொல்லி விடுவாரோ என்று பார்த்தால் இல்லை. ‘உருளைக்கிழங்கு ஃபிரை போட்டு சாப்பாடு எடுத்தா’ என்று புது ஆர்டரை தந்தார்.

“ஊரே சோ்ந்து என்னைக் குத்தறாங்க.. அது உனக்குப் புரியலையா.. நீயும் ஏன் அவங்களுக்கு சப்போர்ட் பண்றே?” என்று திவாகர் மீது மீண்டும் எரிந்து விழுந்தார் பாரு. ஊரே சோ்ந்து குத்துவதற்கு யார் காரணம் என்பதையாவது யோசித்திருக்கலாம். மேலும் திவாகர் இவருடைய கைப்பாவையாக எப்போதும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?!

பாருவை இன்னமும் வெறுப்பேற்றுவதற்காக திவாகருக்கு மாதுளம்பழம் லஞ்சமாக தரப்பட, அவரும் அதை உற்சாகமாக சாப்பிட, பாருவிற்கு கொலைவெறி ஏறியது. அதை அடக்கிக் கொண்டு ‘விஷம் விஷம்தான்.. பாம்பு பாம்புதான்’ என்று புதுமொழி சொல்லிக் கொண்டிருந்தார்.

‘எல்லாமே ரிஜக்ட்டட்’ - ரிவெஞ்ச் மோடை முழுதாக ஆன் செய்த பாரு

QC செய்யப்படும் நேரம். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பாரு. இத்தனை நேரம் பாருவிற்குள் இருந்த சந்திரமுகி மிக ஆவேசமாக வெளிப்பட்ட நேரம் இது. பாட்டில்களை அப்ரூவ் செய்யாமல் கன்னாபின்னாவென்று ரிஜக்ட் செய்ய, இருக்கிற இடமே தெரியாமல் இதுவரை இருந்த கலையரசனுக்கு கூட கோபம் வந்து ‘டாய்.. தள்ளுங்கடா.. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்’ என்று டேபிளை ஆவேசமாக தள்ளினார். தன்னுடைய இன்னொரு அடிமையாக நினைத்துக் கொண்டிருந்த கலையரசனும் எதிர்ப்பு தெரிவிப்பதைப் பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றார் பாரு.

BB Tamil 9 Day 17
BB Tamil 9 Day 17

ஏறத்தாழ அனைத்து பாட்டில்களை பாரு ரிஜக்ட் செய்ய, திவாகர் அதை ஆட்சேபிக்க, முதலாளிகள் கோபம் அடைய சூழல் ரணகளமாக மாறியது. தன் பாட்டில்களை தானே தூக்கிப் போட்டு கிளம்பினார் ஆதிரை.

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, தன் வேலையை மீண்டும் ரிசைன் செய்து விட்டு படுக்கையில் விழுந்து ஆவேசமாக புலம்பினார் பாரு. “பிக் பாஸ். நான் மட்டும் இந்த வேலையை செய்யட்டுமா?” என்று பிக் பாஸிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார் திவாகர். “உழைப்பாளிகளை வெறுப்பேற்றினால் இப்படித்தான் போராட்டம் வெடிக்கும்” என்று கனி சொல்ல, அவருடன் நின்று பேசாமல் கத்திக் கொண்டே நகர்ந்தார் பாரு.

இப்படியாக ஜூஸ் ஃபேக்டரி மொத்தமாக திவால் ஆவதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் பாரு. ‘ஒரே பாம்.. ஒட்டு மொத்த ஊரும் க்ளோஸ்’ என்கிற வசனத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் நம்ம பாருதான்.

BB Tamil 9: `கை வைக்கிற வேலைய வச்சிக்காத!’ - அடித்துக்கொள்ளும் கம்ருதீன், துஷார்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்... மேலும் பார்க்க

Top Cooku Dupe Cooku : `எவிக்ட் ஆனப்ப கூட ரோபோ சங்கர் சார் எல்லாரையும் சிரிக்க வச்சார்!' - பிரியங்கா

வெள்ளித்திரை, சின்னத்திரை என பரிச்சயமானவர் நடிகை பிரியங்கா. இவர்சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `டாப் குக்கு டூப்பு குக்கு' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சமீபத்தில் எலிமினேட் ஆன... மேலும் பார்க்க

BB Tamil 9: "இப்படிலாம் பண்ணாதீங்க மேடம்"- ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்; பார்வதியிடம் காட்டமான சபரி

"கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக... மேலும் பார்க்க

BB Tamil 9: "எதுக்கு இந்த வீட்டில இருக்கீங்க?" - கனி, பார்வதி மோதல்

"கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக... மேலும் பார்க்க

BB Tamil 9: ``அரோரா இருக்க இடத்துலதான் துஷார் இருப்பான்" - BB அப்சரா பேட்டி | Exclusive

இந்த பிக் பாஸ் சீசனின் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.முதலாவது வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறியிருந்தார். வீட்டிலிருந்து வெளியே வந்தவர் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பேட்டிக... மேலும் பார்க்க