சரியாக நள்ளிரவு 11.59க்கு கிடைத்த புரட்டாசி சனிக்கிழமை தரிசனம்! - 70களில் நடந்த ...
BB Tamil 9 Day 4: ரவுண்டு கட்டி அடித்த பிக் பாஸ்; அழுது தீர்த்த நந்தினி- பிக் பாஸில் நடந்தது என்ன?
‘எப்போது குறும்படம் போடுவாார்கள்?’ என்று ஒவ்வொரு சீசனிலும் பார்வையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த சீசனில், முதல் வாரத்திலேயே - அதிலும் தொகுப்பாளர் இல்லாத நிலையில் - குறும்படம் போட்டு அசத்தினார் பிக் பாஸ்.
தண்ணீர் பிடிக்க வேண்டிய கம்ரூதின், அதைச் செய்யாமல் ‘கம்’மென்று தூங்கியதால் வந்த வினை. இந்த தண்ணீர் பிரச்சினைக்காக ஒட்டுமொத்த வீடே அவரை கழுவிக் கழுவி ஊற்றியது.

அதிகாலை 5 மணிக்கு சிவப்பு விளக்கு எரிந்து தண்ணீர் கொட்ட ஆரம்பிக்க, கம்ருதின் உள்ளே படுக்கையில் சுகமாக தூங்கிக் கொண்டிருந்தார். முன்பு கவனிக்காமல் விட்ட விக்ரம், இந்த முறை கவனித்து விட்டு பதறி எழுந்து அங்கும் இங்கும் அலைபாய்ந்து ‘டேய். தண்ணி வருதுடா’ என்று கத்தினாலும் அது வீணே. பத்து செகண்டிற்குள் அத்தனை பெரிய டாங்க்கை நகர்த்தி வைக்க வேண்டும் என்பதெல்லாம் பிக் பாஸ் மட்டுமே யோசிக்கக்கூடிய கொடுமையான ஐடியா. ஒலிம்பிக்ஸில் கூட இப்படியான விதிகள் இருக்காது.
உலகத்தைச் சுற்றி வந்து டைம் வேஸ்ட் செய்யாமல், அம்மா - அப்பாவையே சுற்றி வந்து ஞானப்பழத்தை புத்திசாலித்தனமாக அபேஸ் செய்த விநாயகரைப் போல, நீச்சல் குளத்தில் இருந்து கூலாக ஒரு பக்கெட் நீர் எடுத்துச் சென்றார் திவாகர் (பிரேக் த ரூல்ஸ் - மாத்தி யோசி!) அதை வைத்து கக்கா பிரச்சினையை முடித்துக் கொண்டு, மீண்டும் கூலாக வந்து ஒரு பாட்டில் குடிநீரை பல் துலக்குவதற்காக பிடித்துக் கொண்டு போனார்.
வாட்டர் மேனேஜ்மெண்ட் கம்ருதின் இதை ஆட்சேபித்த போது ‘அவன் கூட பேச எனக்கு இஷ்டமில்ல. பாடி ஷேமிங் பண்றான்.. கிளம்பச் சொல்லுங்க. காத்து வரட்டும்’ என்று லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்தார் திவாகர். கம்ருதீன் உடன் திவாகருக்கு பிரச்சினை இருக்கிறது என்பது வேறு. மற்றவர்களுக்கு சேர வேண்டிய பங்கு நீரை அனுமதி கேட்காமல் எடுப்பது என்பது வேறு. இரண்டையும் திவாகர் எப்படி லிங்க் செய்கிறார் என்பது தெரியவில்லை. (என்னடாங்கடா! பித்தலாட்டமா இருக்கு!).

மார்னிங் ஆக்டிவிட்டி. திவாகரை அகில உலக சூப்பர் ஸ்டார் ஆக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ‘வாட்டர் மெலன் அகாடமி’ என்கிற பெயரில் திவாகர் நடிப்பு சொல்லித் தரும் கோச்சிங் மாஸ்டராம். பயிற்சியை சிறப்பாக முடிப்பவர்களுக்கு ‘நடிப்பு அரக்கன்’ என்கிற பட்டத்தை திவாகர் வழங்குவாராம். (அவன் பொருளை எடுத்து அவனையே போடறது, அப்படின்னா இதான் போல!)
திவாகர் சொல்லித் தந்த நடிப்பை இன்னமும் அதிகமாக்கி “சுள்ளான்.. சுளுக்கெடுத்துடுவான்” என்று முகத்தின் மேலேயே வந்து பாய்ந்து ஆயிரம் ரூபாய்க்கு நடித்தார் துஷார். பாருவிற்கு மிக பொருத்தமான பாத்திரத்தை தேர்ந்தெடுத்தது திவாகரின் புத்திசாலித்தனம். ‘திமிரு’ படத்தின் ஸ்ரேயா பாத்திரத்தை வைத்து ‘எலேய்.. நான் மதுரைக்காரிடி’ என்று திவாகரின் இடுப்பிலேயெ ஒரு கிக் வைத்தார் பார்வதி. வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை சிறப்பாகப் பேசியதற்காக விக்ரமிற்கு ‘நடிப்பு அரக்கன்’ பட்டம் கிடைத்தது. (அப்ப திவாகருக்கு இந்தப் பட்டம் கிடையாதா?! ஹப்பாடி!)
‘மசால் வடைன்னா.. மசால் வடைதான்யா.. என்னா… மொறு மொறுன்னு இருக்கு’ என்கிற வடிவேலு காமெடி வசனம் போல, நந்தினிக்கு மெதுவடை என்றால் ரொம்பப் பிடிக்குமாம். சூப்பர் டீலக்ஸ் வீட்டிற்காக சுட்டு வைத்திருந்த வடைகளுள் ஒன்றை காக்காய் போல் பறித்துக் கொண்டு ‘எனக்கு உளுந்துவடைன்னா உசுரு.. இதைச் சாப்பிடாம எப்படி இருக்கறது. கொடுமை. கொஞ்சம் நேரம் கைல வெச்சு அழகு பார்க்கட்டுமா?” என்று காதலியைப் பிரிய மனமில்லாமல் இருக்கும் காதலனைப் போல தவித்தார். (அப்ப நைட்டு அழுது தீர்த்தது, இந்த வடை கிடைக்காம போன காரணத்தில்தானா?!).

“பார்வதி வேலையை ரிசைன் பண்ணா பண்ணிட்டுப் போகட்டுமே. அது அவ ஸ்ட்ராட்டஜி.. ஏன் அவளைப் போய் தொங்கிக்கிட்டு இருக்கீங்க.. ஊர்ல வேற ஆளா இல்லை. அந்த வீட்ல இருந்து இன்னொரு வேலைக்காரனைப் பிடிங்க’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் வியன்னா. கொஞ்சு மொழியில் பேசி ஒயிலாக உலவினாலும் சைலண்ட்டாக வயலெண்ட் செய்வதில் அம்மணி கில்லாடி போலிருக்கிறது.
ஒட்டு மொத்த வீட்டையும் கூட்டி மீட்டிங் போட்ட பிக் பாஸ் “இப்ப உங்க கிட்ட எவ்வளவு தண்ணி இருக்கு.. நிலவரம் தெரியுமா.. இதுக்கு யார் காரணம்.. இருங்க குறும்படம் போடறேன்’ என்று ‘குற்றம் நடந்தது என்ன?’ பாணியில் வீடியோவை ஒளிபரப்பினார். வாட்டர் மேனேஜ்மெண்ட் டீம் ஐந்து முறை தங்களின் பணியிலிருந்து தவறியது ஆதாரபூர்வமாக நிரூபணமானது. தாங்க முடியாமல் கம்ருதீன் தூங்கியது கூட ஓகே. பாரு பஞ்சாயத்தை வேடிக்கை பார்க்கும் சுவாரசியத்தில் தண்ணீர் வருவதை கவனிக்கத் தவறியதுதான் பெரிய தவறு.
“அடுத்த டாஸ்க் தண்ணிய வெச்சுதான். இப்ப நான் மக்கள் கிட்ட என்ன சொல்றது.. தண்ணி இல்லன்னு சொல்ல முடியுமா?” என்று கேள்விகள் கேட்டு மக்களைப் பிழிந்தெடுத்தார் பிக் பாஸ்.
(ஏன்யா. பிக் பாஸூ.. இது என்ன ஒலிம்பிக் கேமா.. ஏற்கெனவே ஷெட்யூல் போட்டுட்டோம்.. மாத்த முடியாதுன்ற மாதிரி.. சொல்றதுக்கு. .. என்னமோ மக்களுக்கு சேவை பண்ற மாதிரி.. அவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு பில்டப் வேற. எப்படியும் பெரும்பான்மையான டாஸ்க்குக கோக்குமாக்கத்தான் இருக்கப் போகுது.. அதுல ஒண்ண மாத்தி விட்டா என்ன?!)
கம்ரூதினும் சபரியும் தங்களின் தவறுகளுக்கு சரணாகதி அடைந்து சாஷ்டாங்க மன்னிப்பு கேட்டாலும் “தம்பிங்களா.. இன்னமும் சூதானமா இருக்கணும்ப்பா.. ஒரு பொறுப்பு வேணாமா?” என்று மக்கள் ரவுண்டு கட்டியதில் கம்ருதீன் காண்டாகி விட்டார். குறிப்பாக ஆதிரை சுள்ளென்று கேள்விகள் கேட்டதில் டென்ஷன் ஆகி இருவருக்கும் முட்டிக் கொண்டது.

என்னதான் வாட்டர் மேனேஜ்மெண்ட் டீம்தான் நீருக்கு பொறுப்பு என்றாலும் தண்ணீர் என்பது பொதுப் பிரச்சினைதானே?! அவர்களுக்கு உதவும் பொறுப்பை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளலாமே? வெறுமனே குறை மட்டும் சொல்வது எதற்காக?!
‘தண்ணிய வெச்சு டாஸ்க்’ என்று பிக் பாஸ் சொன்னது என்னவென்று பார்த்தால் அழுக்கு ஜீன்ஸை தோய்க்க வேண்டுமாம். ‘வீட்டு தல’ டாஸ்க்கின் இரண்டாம் பகுதி இது. அந்த ஜீன்ஸை ஒரு பழைய மெக்கானிக் ஷெட்டில் இருந்து தூக்கி வந்திருப்பார்கள் போல. அத்தனை அழுக்காக இருந்தது. அதைச் சுத்தமாக துவைப்பதில் வெற்றி பெறுபவர்கள்தான் அடுத்த சுற்றிற்கு நகர முடியும்.
ஆரம்பித்தது அந்த குழாயடிச் சண்டை. பஸ்ஸர் அடித்ததும் பக்கெட்டை தூக்கிக் கொண்டு தண்ணீர் பிடிப்பதற்காக மக்கள் ஆவேசமாக ஓடியதில் ஒரே தள்ளுமுள்ளு. கெமியும் பார்வதியும் ஒருவரின் ஒருவர் பக்கெட்டை பிடுங்க முயற்சித்து ஆக்ரோஷமாக மோதினார்கள். உண்மையிலேயே நடந்த குழாயடி சண்டை. தலைமுடியை இழுத்துக் கொள்ளாததுதான் பாக்கி. இறுதியில் கெமி வென்றார். (என்ன இருந்தாலும் பேஸ்கெட் பால் சாம்பியன் ஆச்சே!) “கெமி பண்றது ரொம்ப கேவலமான வேலை” என்று திட்டிய படி மூச்சு வாங்க கோபத்துடன் திரும்பிச் சென்றார் பாரு. ஜீன்ஸ் பேண்டை எடுக்காமலேயே பாரு தண்ணீர் பிடிக்க வந்ததால் இத்தனை பொிய அடிதடி.
பிரவீன் ராஜிற்கு கிடைத்தது உலகத்திலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஜீன்ஸ் பேண்ட் ஆக இருக்க வேண்டும். அத்தனை அழுக்கான பேண்ட்டை உதறி, கசக்கி, பிழிந்து என்று என்னென்னவோ செய்து சுத்தமாக மெனக்கெட்டார். தன்னை ஆட விடாமல் துரத்தியதால் ஓரமாகச் சென்று அழுகை, கோபம், ரிவென்ஜ் என்று சகலவிதமான எக்ஸ்பிரஷன்களும் அலைபாய கண் கசிந்து கொண்டிருந்தார் பார்வதி. (பிக் பாஸ் ஏன் ஸ்கிரிப்டட் இலலை என்பதற்கான உதாரணக்காட்சி இது. உலகத்தின் மிகச் சிறந்த நடிகையால் கூட இப்படி தத்ரூபமான முகபாவங்களைத் தர முடியாது!).
துணி துவைக்கும் கல்லில் ஆவேசமாக பேண்ட்டை அடித்துக் கொண்டிருந்தார் துஷார். அவர் மீது வீட்டில் பலருக்கு சாஃப்ட் கார்னர் இருக்கிறது போல. எனவே அவருக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. இறுதியில் துஷார், பிரவீன்ராஜ், ஆதிரை ஆகிய மூவரும் டாப் 3-ல் வந்தார்கள். அடுத்து நடக்கும் டாஸ்க்கில் யார் ‘வீட்டு தல’ என்பது முடிவாகும் போல. (ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகுது தெரியுமா என்று வார இறுதியில் விசே வகுப்பெடுக்கலாம்!)

பாரு பஞ்சாயத்து காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த கதை நேரம் இன்று மீண்டும் ஆரம்பித்தது. முதலில் வந்த ஆதிரை கண்ணீரும் கம்பலையும் என்று எதுவுமில்லாமல் தன் சினிமா ஆர்வத்தை இயல்பாக வெளிப்படுத்தினார். சினிமா, மீடியா போன்றவற்றில் இருப்பது மலினமாக கருதப்படுகிறது. குறிப்பாக கிராமங்களில். இந்தத் தடையை உடைத்துக் கொண்டு வந்த ஆதிரை, இதர கிராமத்துப் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதை பெருமையுடன் குறிப்பிட்டுக் கொண்டார்.
அடுத்து வந்தார் பிரவீன் காந்தி. “அதாவதுங்க மக்களே.. இந்த நான் இருக்குதல.. அதுதான் பிரச்சினை” என்று ஆரம்பிக்க “தத்துவ வகுப்புலாம் வேண்டாம். உங்க கதையை மட்டும் சொல்லுங்க” என்று பார்வதி ஆட்சேபிக்க “இங்க பாரும்மா.. நான் ஒரு டைரக்டரு.. நான் சொல்றத கேக்கறதா இருந்தா கேளுங்க. இல்ல. வெளியே போங்க” என்று கோபமில்லாத கோபத்துடன் சொன்னது சிறப்பு. இதே போல் பிரவீன்காந்தி பேசியதை கால் மேல் கால் போட்டுக் கொண்டு அதை ஆட்டிய படியே பார்வதி இருந்ததும் ஒருவகையான அட்ராசிட்டிதான். (தனக்கு காயம் ஏற்படுகிற போது வானத்தைப் பார்த்து அழுகிற மனசு, இன்னொருத்தருக்கு அதே காயத்தை தராமல் இருப்பதுதான் மனமுதிர்ச்சி!).
ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற ஹிட் திரைப்படங்களை தந்திருக்கும் பிரவீன் காந்தி ‘திரிஷாவை நான் அறிமுகம் செய்தேன்’ என்று சொல்லி சபையோரை வியப்பில் ஆழ்த்தினார். கூடவே ‘சீரியல்ல நடிக்கறாங்கள்ல.. சாந்தி வில்லியம்ஸ்.. நான்தான் அவங்களையும் ஜோடி படத்தில் அறிமுகம் செய்தேன்’ என்று சொல்லியது முரண். சாந்தி வில்லியம்ஸ் குழந்தை நட்சத்திரமாக எழுபதுகளில் இருந்தே தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். ஒருவேளை ரீஎன்ட்ரி என்பதைத்தான் அப்படி சொன்னாரோ, என்னவோ.
“நிறைய வெற்றிகளைத் தந்தவுடனே.. எனக்குள்ள இருக்கிற இன்னொரு ‘நான்’க்கு அகங்காரம் கூடி விட்டது. நானே ஹீரோவாக ஆகணும்னு அடம்பிடிச்சு ஒரு படம் தயாரிச்சு அது தோல்வில முடிஞ்சது. நமக்குள்ள இருக்கிற நல்ல ‘நானை’ மட்டுமே கேட்டா வாழ்க்கைல உருப்படலாம்’ என்பது போல் பிரவீன்காந்தி சொன்னது ஒரு நல்ல நடைமுறை உபதேசம்.

கதை நேரத்தில் அடுத்து வந்தவர் கலையரசன். ‘என் பேரு மகாகவி காளி. எங்கப்பா அம்மாவை பயங்கரமா டார்ச்சர் செய்வார். மூணு அக்கா. குடும்பத்தோட தப்பிச்சு வந்து ரோட்ல நின்னோம். நாட்டுப் புறக் கலை வளர்ச்சி போராட்டத்தில் 7 முறை ஜெயிலுக்குப் போயிருக்கேன். என்னால பயன்பெற்றவர்கள் கூட என்னைக் கண்டுக்கலை. பறை என்னும் இசையை பிரபலமாக்கறதுக்கு நிறைய விஷயம் பண்ணியிருக்கேன். கூடிய சீக்கிரம் எனக்கு ‘பத்ம விபூஷன்’ விருது கூட கிடைக்கலாம்” என்றெல்லாம் அள்ளி விட்டார் கலை. (எத்தனை சதவீதம் உண்மையோ என்று தெரியவில்லை!).
தண்ணீரை கவனிக்க விட்டு பிக் பாஸிடம் டோஸ் வாங்கியதால், கார்டன் ஏரியாவிலேயே நண்பர்களுடன் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார் சபரி. அப்போது நடந்த ஜாலியான உரையாடலில் இவர்கள் நந்தினியையும் இழுத்து வைத்து கலாய்த்தார்கள்.

‘அழுகை’ என்கிற வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள், கண்களில் இருந்து ஆறாகப் பெருகும் அளவிற்கு கண்ணீர் விட்டு அழக்கூடிய நந்தினி, இந்தக் கமெண்ட்டினால் புண்பட்டு பாத்ரூமில் சென்று டென்ஷன் ஆகி கத்த, ஒரு மூத்த சகோதரிக்கான வாஞ்சையுடனும் மனமுதிர்ச்சியுடன் அவரை கனியக்கா தேற்றியது நல்ல விஷயம். “வாழ்க்கைல நிறைய கஷ்டப்பட்டுட்டேன். இங்க வந்துதான் சிரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’ என்று குழந்தை போல் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார் நந்தினி.