Chepauk: `மற்ற மைதானங்களை விட சேப்பாக்கம்தான் பெஸ்ட்' - ஐ.சி.சி கொடுத்த அங்கீகாரம்
இந்திய அணியின் ஹோம் சீசனில் பயன்படுத்தப்பட்ட பிட்ச்களுக்கு ஐ.சி.சி வழங்கியிருக்கும் ரேட்டிங்கை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்தியா ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் சேப்பாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் மட்டுமே 'Very Good' என்கிற மிகச்சிறந்த நிலையை பெற்றிருக்கிறது.
போட்டிகள் நடக்கும் மைதானங்களின் பிட்ச்களுக்கு ரேட்டிங் வழங்குவது ஐ.சி.சியின் நடைமுறை. ஒவ்வொரு பிட்ச்சுக்கும் Very Good, Satisfactory, Unsatisfactory, Below average, Poor, Unfit என ஐ.சி.சி மதிப்பீடுகளை வழங்கும். இந்திய அணி கடந்த இரண்டு மாதங்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறது. சேப்பாக்கம், கான்பூர், பெங்களூரு, புனே, மும்பை வான்கடே என 5 மைதானங்கள் இந்தப் போட்டிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் மட்டுமே 'Very Good' என்கிற சிறந்த நிலையை பெற்றிருக்கிறது. மற்ற எல்லா பிட்ச்களும் 'Satisfactory' என்ற நிலையைத்தான் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, கான்பூர் மைதானத்தின் அவுட்பீல்ட் 'Unsatisfactory' என்ற நிலையை பெற்றிருக்கிறது.
கான்பூரில் மழையால் பாதிக்கப்பட்டு இரண்டு நாள் ஆட்டம் முழுமையாக தடைபட்டிருந்தது. தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்ற முடியாமல் மைதான ஊழியர்கள் திணறிய சம்பவமும் நடந்திருந்தது. உட்கட்டமைப்புரீதியாக தமிழக மைதானங்கள் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக இருக்கிறதென்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே ஐ.சி.சியின் ரேட்டிங் அமைந்திருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த ரஞ்சிப் போட்டியின் போது சவுராஷ்ட்ரா அணியின் கேப்டனான உனத்கட்டும் தமிழக மைதானங்களின் உட்கட்டமைப்பைப் பற்றி வெகுவாக பாரட்டியிருந்தார். மற்ற அசோசியேஷன்களும் தமிழ்நாடு அசோஷியேஷனை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.