முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி...
Cooking Vessels: அவை வெறும் சமையல் பாத்திரங்கள் அல்ல... நோய் தடுப்பான்கள்! - பாத்திரங்களின் பலன்கள்
மண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. 'எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம்’ என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன.
''மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா?’' என சித்த மருத்துவர் சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

''அந்த காலத்தில், வசதியற்றவர்கள் மண்சட்டியில் சாதம் செய்வார்கள். மணமாய் இருக்கும். ஓரளவுக்கு வசதியுள்ளவர்கள் உலோகத்தால் ஆன பாத்திரங்களைச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல், பாயாசம், அரிசி உப்புமா போன்ற உணவு வகைகளை வெண்கலத்தாலான பானைகளில் செய்வார்கள். டம்ளர், கரண்டி என அனைத்துமே பித்தளை, வெண்கலம் போன்ற உலோகத்தால் ஆனவையாக இருக்கும்.
வெண்கலப் பாத்திரங்களில் உணவு உண்பதால், பலவித நோய்கள் குணமாகும் என்கிறார் போகர். ஆனால், நெய் மற்றும் புளிப்புச் சுவையுடைய பொருள்களை வெண்கலப் பாத்திரங்களில் தவிர்க்க வேண்டும் என்கிறார். குறிப்பிட்ட இந்த உணவு வகைகளைத் தவிர்த்து மற்ற உணவுப் பொருள்களை இதில் தயாரித்து உண்பதால், அவை அமிர்தத்துக்கும் மேலான பொருளாகும் என்கிறார். 'சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் மருத்துவருக்குச் சமம்’ என்கிற மருத்துவர் சொக்கலிங்கம், உலோகப் பாத்திரங்களின் பலன்களை அடுக்கினார்.
''இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பம் தணியும். சோகை நீங்கி உடல் சுகம் பெறும். இரும்புச் சட்டியில் தாளித்தவுடன், அதில் சாதத்தைப் போட்டுப் பிசைந்து சாப்பிடும்போது உணவின் வாசம் அதிகரிப்பதுடன் சுவையும் கூடும்.
தாமிரப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது, அது நீண்ட நாள்களுக்கு கெடாமல் இருக்கும். திருப்பதி லட்டு தாமிரப் பாத்திரங்களில்தான் செய்யப்படுகிறது. தாமிரப் பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்தும்போது, உடலில் உள்ள கிருமிகள் நீங்கும். வெண்புள்ளி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அண்டாது.
காய்ச்சலில் அவதிப்படுபவர்கள், பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கும்போது தாகம் குறைந்து, உடல் வலுப்பெறும். நீர்க்கடுப்பு உள்ளவர்களுக்கு உடல் குளிர்ச்சியடையும்.
ஈயம் மற்றும் வெளிப்பூச்சாக ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் தோல் தொடர்பான நோய்கள், கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் உணவு சமைக்கும்போது வாசனை மிகுந்து இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும்.

அலுமினியப் பாத்திரங்கள் எடை குறைவாக இருக்கும். இதில் சமைத்துச் சாப்பிடுவதால், உணவு எளிதில் செரிமானம் ஆகும். இருப்பினும், தொடர்ந்து அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது அல்ல. அலுமினியப் பாத்திரத்தில் தக்காளி, புளி, எலுமிச்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள உணவுப் பொருள்களைச் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். புளிப்புச் சுவையில் உள்ள அமிலத்தன்மை பாத்திரத்தை அரிக்கத் தொடங்கிவிடும். இதனால் உணவும் நச்சுத் தன்மை அடைந்து, உடலுக்குக் கேட்டை விளைவிக்கும்.
பிளாஸ்டிக், நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி உடலுக்கு நோயை வரவழைத்துக்கொள்ளாமல், முடிந்தவரை நம் முன்னோர்கள் பயன்படுத்திய உலோக, மண் சட்டிகளைப் பயன்படுத்துவதே உடல் நலத்திற்கு நல்லது'' என்கிறார் சொக்கலிங்கம்.
நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக பாதக விஷயங்களைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணரும், விரிவுரையாளருமான செல்வராணி ரமேஷிடம் கேட்டோம்.

''நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது, எண்ணெயின் அளவு மிகக் குறைவாகத்தான் தேவைப்படும். அதனால், கொழுப்பு சேராது என்று நினைத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் PFOA (Perfluorooctanoic Acid) என்ற வேதிப்பொருள் தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவது இல்லை. எனவே இந்த வகைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். லைபோபுரோட்டீன் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது. எனவே, சமைக்கும் பாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் பழமையைக் கடைப்பிடிப்பதே ஆரோக்கியத்துக்கான வழி!'' என்கிறார் செல்வராணி ரமேஷ்.