Chandrababu Naidu: ``மூன்று மொழிகளையல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்'' - சந்திரபாபு ...
Cyber Crime: ஓய்வு பெற்ற IFS அதிகாரியிடம் ரூ.6.80 கோடியை ஏமாற்றிய மோசடி கும்பல்... என்ன நடந்தது?
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் க்ரைம் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. சமீபகாலமாக உங்கள் பெயருக்கு வந்திருக்கும் பார்சலில் போதை பொருள்கள் இருப்பதாகக் கூறி சைபர் க்ரைம் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்திருப்பதாக சிபிஐ, சுங்கத்துறை அதிகாரிகள், மும்பை போலீஸ் என கூறியும் சைபர் மோசடி நடந்து வருகிறது. அதோடு சமூகவலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தும் இந்த மோசடி நடந்து வருகிறது. இதில் தொழிலதிபர்களும் அரசு அதிகாரிகளும் குறி வைத்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாடு வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலராக இருந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரியான கிருஷ்ணகுமார் கௌசல் என்பவரிடமிருந்து 6.80 கோடி ரூபாயை ஒரு கும்பல் மோசடி செய்திருக்கிறது. இதுதொடர்பாக அவர், சென்னை சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்திருக்கிறார்.
அதன்பேரில் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார், ஐ.எஃப்.எஸ் அதிகாரியை ஏமாற்றியவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் கூறுகையில், ``ஐஎஃப்எஸ் அதிகாரியான கிருஷ்ணகுமார் கௌசல் , கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு கிடைத்த பணத்தை வைப்புத் தொகையாக வங்கிகளில் வைத்திருந்தார். அதுகுறித்து தகவலறிந்த சைபர் க்ரைம் கும்பல், கிருஷ்ணகுமாரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறது. அப்போது ஆன்லைன் டிரேடிங் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் கிடைக்கும் என வாட்ஸ்அப் மூலம் கிருஷ்ணகுமாருக்கு ஆசைகளை காண்பித்திருக்கிறது. அதை உண்மையென நம்பிய கிருஷ்ணகுமாரும் அந்த வாட்ஸ்அப்பில் வந்த ஒரு செயலியை தன்னுடைய செல்போனில் டவுன்லோடு செய்திருக்கிறார். (SMC apex என்ற செயலியும்,sharada capital என்ற செயலி) அந்த இரண்டு செயலிகள் மூலம் ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட தடவை பணத்தை கிருஷ்ணகுமார் முதலீடு செய்திருக்கிறார்.

அவர் செய்த முதலீடு தொகைக்கு ஏற்ப அதிகளவில் லாபம் கிடைத்தது போன்று அந்த செயலிகளில் பணம் இருப்பதாக காட்டியிருக்கிறது. அதனால், கிருஷ்ணகுமாரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். இந்தச் சூழலில்தான் அந்தப் பணத்தை அவர் எடுக்க முயன்றபோது அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்திருக்கிறார். இந்த வகையில் 6 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை இழந்து விட்டதாக கிருஷ்ணகுமார் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். கிருஷ்ணகுமார் பணம் முதலீடு செய்தது போலி நிறுவனங்கள் என்றும் அந்த நிறுவனங்கள் பெயரில் போலியாக வங்கி கணக்குகளை தொடங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் முதலீடு செய்யப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து அந்தப் பணம் எந்த வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டிருக்கிறது என விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் சைபர் க்ரைம் மோசடி கும்பலை பிடித்துவிடுவோம். அதே நேரத்தில் இதுபோன்ற மோசடி கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்" என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
