Doctor Vikatan: கர்ப்ப காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும்போதும் பாராசிட்டமால் எடுக்கலாமா?
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் காய்ச்சலோ, உடல் வலியோ வந்தால் பாராசிட்டமால் மாத்திரை எடுக்கலாமா.... எந்த மாத்திரையும் எடுக்கக்கூடாது, அது குழந்தையை பாதிக்கும் என்கிறார் என் மாமியார். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய மருந்துகளை ஏ, பி, சி, டி, மற்றும் எக்ஸ் என பல வகைகளாகப் பிரிக்கலாம். 1979-ம் வருடமே, எஃப்.டி.ஏ (FDA) எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்தான் மருந்துகளை இப்படி வகைப்படுத்தி உள்ளது.
அதன்படி ஏ வகை மருந்துகளை மனிதர்களின் மீது சோதனை செய்ததில், அவை கருவிலுள்ள குழந்தைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிந்தது. பி வகை மருந்துகள், மனிதர்கள்மீது சோதனை செய்யப்படவில்லை. ஆனாலும், விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டபோது, கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிந்திருக்கிறது. சி வகை மருந்துகள் மனிதர்கள், விலங்குகள்மீது சோதனை செய்யப்படாதவை என்பதால், அவற்றின் வீரியம், விளைவுகள் எப்படியிருக்கும் என்பது தெரியாது. டி வகை மருந்துகள், ரிஸ்க்கானவை என்றாலும், அவற்றிலும் சில பலன்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
உதாரணத்துக்கு, அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில், இந்த டி வகை மருந்தைக் கொடுக்க வேண்டியிருக்கும். எக்ஸ் வகை மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பிரச்னையைத் தரக்கூடியவை... அந்த வகை மருந்துகளால் கர்ப்பிணிக்கு எந்த நன்மையும் கிடையாது என்பதால் அவற்றைத் தவிர்த்தே ஆக வேண்டும். எனவே, கர்ப்ப காலத்தில் ஏ மற்றும் பி வகை மருந்துகளைக் கொடுக்கலாம். சி வகை மருந்துகள் சந்தேகத்துக்குரியவை. தாயைக் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் டி வகை மருந்துகளைத் தரலாம். எக்ஸ் வகை மருந்துகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது பாராசிட்டமால் மருந்தானது பி வகையில் வருகிறது. அது ஓரளவு பாதுகாப்பானது. ஆனாலும், அதை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும். அதைத் தாண்டும்போது கல்லீரல் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இன்று 80 சதவிகிதத்துக்கும் மேலான கர்ப்பிணிகள், மருத்துவர் பரிந்துரையின்றி, ஓவர் த கவுன்ட்டர் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இது கிராமப் பகுதிகளில் இன்னும் அதிகம். எனவே, கர்ப்ப காலத்திலும் சரி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சரி, எந்த மருந்தை எடுத்தாலும், மருத்துவரின் ஆலோசனையின்றி எடுக்கக்கூடாது. கருவானது வளர்ந்துகொண்டிருக்கிற நேரத்தில் இப்படி சில மருந்துகளை எடுக்கும்போது குழந்தையின் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். எக்ஸ் வகையின் கீழ் வரும் எந்த மருந்துகளையும் இவர்கள் எடுக்கவே கூடாது.
அது மட்டுமன்றி, வலிப்பு மாதிரியான சில பிரச்னைகளுக்கு நீங்கள் ஏற்கெனவே மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், கர்ப்பத்துக்காகத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அந்த மருந்துகளுக்கு மாற்று கேட்டுப் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள் ஏதேனும் பிரச்னைகளைத் தருமா என்றும் மருத்துவரிடம் உறுதிசெய்துகொள்ள வேண்டும். கர்ப்பம் உறுதியான பிறகு இந்த மருந்துகளை நிறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. ஏற்கெனவே எடுத்துக்கொண்ட மருந்துகளின் தாக்கம் உங்கள் உடலில் இருக்கும். எனவே, கர்ப்பத்துக்கு திட்டமிடுவதில் இருந்தே மருந்துகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.