அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! -கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்ன...
Doctor Vikatan: தள்ளிப்போகும் முதலிரவு... இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை, என்ன தீர்வு?
Doctor Vikatan: எனக்கு சமீபத்தில்தான் திருமணமானது. முதலிரவின்போது என்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை. உடல் இறுகிவிட்டது போல உணர்ந்தேன். 'முதல்முறை... அப்படித்தான் இருக்கும்... பயப்படாதே... பதற்றப்படாதே....' என கணவரும் ஆறுதல் சொன்னார். ஆனால், திருமணமாகி 4 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பிரச்னை தீர்ந்த பாடாக இல்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது... என்னுடைய வித்தியாசமான பிரச்னைக்குத் தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு உங்கள் உடல் ஒத்துழைக்காத நிலையை 'வெஜைனிஸ்மஸ்' (Vaginismus) என்று குறிப்பிடுவோம். உங்களுடைய அறிகுறிகளும் அப்படித்தான் தெரிகின்றன. இந்தப் பிரச்னையில் வெஜைனாவின் தசைகள் சுருங்கிக் கொள்ளும். 'வெஜைனிஸ்மஸ்' பிரச்னையானது தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர் அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது சிலர் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.
திருமணமாகாத பெண்ணாக இருந்து, பீரியட்ஸின்போது டாம்பூன் அல்லது மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிக்க நினைத்தாலும் அதற்கு அவர்கள் உடல் ஒத்துழைக்காது. கஷ்டப்பட்டு அதைப் பொருத்திக்கொள்ள முனையும்போது எரிச்சலும் வலியும்தான் மிஞ்சும். இந்த அறிகுறிகளை வைத்து உங்களுக்கு 'வெஜைனிஸ்மஸ்' இருப்பதை உறுதிசெய்யலாம். சிறுவயதில் நீங்கள் சந்தித்த பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், முதல்முறை தாம்பத்திய உறவு ஏற்படுத்திய கசப்பான அனுபவம், செக்ஸ் உறவை நினைத்தாலே வெறுப்பும் பதற்றமும் ஏற்படுவது, வெஜைனா, கர்ப்பவாய்ப் பகுதி போன்றவற்றில் ஏதேனும் தொற்று இருப்பது போன்று இப்பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
வெஜைனிஸ்மஸ் பிரச்னையை 95 சதவிகிதம் குணப்படுத்த முடியும். மருத்துவரை அணுகி முதலில் உங்கள் பிரச்னை பற்றி பேச வேண்டும். தாம்பத்திய உறவு குறித்த உங்களது பயம், பதற்றம் போன்றவற்றைப் போக்கவும் சிகிச்சை அவசியம். அடுத்து மருத்துவர் உங்களுக்கு சில பயிற்சிகளைக் கற்றுத் தருவார். அதாவது தாம்பத்தியத்துக்கு ஒத்துழைக்காத வெஜைனா தசைகளைத் தளர்த்துவதற்கான பயிற்சிகள் அவை.

உங்களுடைய கடந்தகால கசப்பான அனுபவங்களைப் பேசவைத்து உங்களை அந்தக் கசப்பிலிருந்து மீட்கவும் தெரபி வழங்கப்படும். அடுத்து, பிரத்யேக கருவிகள் கொண்டு அளிக்கப்படும் புரொக்ரசிவ் டீசென்சிட்டைசேஷன் தெரபி (Progressive desensitization therapy) கொடுக்கப்படும். இந்தப் பிரச்னையை வெளியே சொல்லத் தயங்கிக் கொண்டு, அமைதி காப்பது உங்கள் திருமண உறவை மட்டுமல்ல, உங்கள் மனநலனையும் உடல்நலனையும்கூட பாதிக்கும். கணவருக்கும் உங்களுடைய இந்த நிலை குறித்துத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் சிகிச்சைக்குச் செல்லும்போது அவரையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.