சட்ட விரோத ஆயுதங்களை 7 நாள்களில் ஒப்படைக்கவும்: மணிப்பூர் ஆளுநர் உத்தரவு!
Doctor Vikatan: பீரியட்ஸ்... கட்டிகளாக வெளியேறும் ப்ளீடிங்... பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: என் வயது 36. பீரியட்ஸின் போது கடந்த சில மாதங்களாக கட்டி கட்டியாக ப்ளீடிங் ஆகிறது. சாக்லேட் சைஸில் கட்டிக்கட்டியாக வருகிறது. இது ஏதேனும் பிரச்னையா..?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

பீரியட்ஸின் போது வெளியாகும் ரத்தத்தில் சின்னச் சின்ன கட்டிகள் இருப்பது பிரச்னையல்ல. ஏனென்றால், அது ரத்தத்தை வெளியே கொண்டு வருவதற்கான உடலின் இயற்கையான அமைப்புதான் அது. ஆனால், அப்படி வரும் கட்டிகள் அளவில் பெரியதாக இருந்தாலோ, ஒவ்வொரு பீரியட்ஸின்போதும் அந்த அளவு பெரிதாவதாக உணர்ந்தாலோ, அதைச் சாதாரணமானதாக அலட்சியம் செய்யக்கூடாது.
கட்டிகளின் அளவு பெரிதாக இருப்பது உங்களுக்கு அளவுக்கதிக ப்ளீடிங் இருப்பதற்கான அறிகுறி. அதாவது சிலருக்கு 7 முதல் 8 நாள்கள்வரைகூட ப்ளீடிங் தொடரும். ஆனால், நீங்கள் குறிப்பிடுவது போல கட்டிகள் வராது. ஆனால், சிலருக்கு 3 நாள்கள் மட்டுமே ப்ளீடிங் இருக்கும். ஆனால், அந்த ப்ளீடிங் கட்டிகளாக, பெரிய கட்டிகளாக வெளிவரும். அது அசாதாரணமானது.
உங்களுக்கு 36 வயது என்பதால் ஹார்மோனல் இம்பேலன்ஸ் (Hormonal imbalance) எனப்படும் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை வந்திருக்கலாம். அதாவது உங்களுடைய ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் அளவுகளில் சமநிலையின்மை ஏற்பட்டு, கர்ப்பப்பையின் திசுக்கள் அசாதாரணமாக உதிர்ந்து வெளியேறுகின்றன. உங்களுக்கு ஃபைப்ராய்டு பாதிப்பு இருந்தாலும் ப்ளீடிங்கும் அதிகமிருக்கலாம், அது கட்டிகளாகவும் வெளியேறலாம்.

சிலருக்கு கர்ப்பப்பையானது வீங்கி இருக்கலாம். அடினோமயோசிஸ் ( Adenomyosis ) எனப்படும் இந்த நிலையிலும் கட்டிகளாக ப்ளீடிங் வெளியேறலாம். கர்ப்பப்பையின் உள்ளே பாலிப் எனப்படும் சதை வளர்ச்சி இருக்கலாம். கர்ப்பப்பையின் உள் லேயரான எண்டோமெட்ரியம், கர்ப்பப்பையைத் தாண்டி, வேறு பகுதிகளில் வளர்வதை எண்டோமெட்ரியோசிஸ் என்போம். இது போன்ற நிலைகளிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்னை வரலாம். தைராய்டு பாதிப்பும் ஒரு காரணம்.
ஸ்ட்ரெஸ், திடீரென உடல் எடையில் ஏற்ற, இறக்கங்கள், திடீரென ஆரம்பித்திருக்கும் மருத்துவ சிகிச்சை போன்றவையும் அதிக ப்ளீடிங் ஏற்பட காரணங்களாக இருக்கலாம். புதிதாக பூப்பெய்திய பெண்களுக்கும் ரத்தம் கட்டிகளாக வெளியேறலாம். அப்படிப்பட்ட பெண்களுக்கு, குடும்ப பின்னணியில் ரத்தம் தொடர்பான குறைபாடுகள் உள்ளனவா என்று பார்க்கப்படும். கட்டிகள் ரொம்ப பெரிதாக இருந்து, உங்களுக்கு மயக்கம் வந்தாலோ, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நாப்கின் மாற்ற வேண்டி இருந்தாலோ, 7-8 நாள்கள் தாண்டியும் பீரியட்ஸ் நீடித்தாலோ, களைப்பாக, தலைச்சுற்றுவதாக உணர்ந்தாலோ, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.